கடந்த சில நாள்களாக பெட்ரோல், டீசல் விலையும், வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கேஸ் சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வுதான், திடீர் விலை ஏற்றத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. தலைநகரில் டெல்லியில் நேற்று(பிப்.24) 769 ரூபாய்க்கு விற்பனையான கேஸ் சிலிண்டர், இன்று (பிப்.25) 794 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் 25 ரூபாய் அதிகரித்துள்ளது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், சிலிண்டர் விலை ஏற்றத்தைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்வீட்டில், "கடந்த 3 மாதங்களில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை 200 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை ஏற்கனவே 100 ரூபாயை எட்டிவிட்டது. சாமானிய மக்கள் விலைவாசி உயர்வில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில், மோடி அரசின் செயல்பாடுகள் பொருளாதாரத்தில் கோடீஸ்வரர்களுக்கு ஆதரவாகவே தொடர்ந்து இருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'மாநில அரசை வஞ்சிக்கும் மத்திய அரசு' திடீரென்று மாநில உரிமை பேசும் ஓபிஎஸ்