நாட்டில் தனியார்மயமாக்கல் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக, 2.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நான்கு விமான நிலையங்களின் பங்குகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
அதாவது, டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய விமான நிலையங்களில் இந்திய விமான ஒழுங்காற்று ஆணையம் மீதம் வைத்துள்ள பங்குகளை விற்கவும் அதேபோல் அடுத்த நிதியாண்டில் மேலும் 13 விமான நிலையங்களின் பங்குகளை விற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் பெறவுள்ளது.
இதன் முதல்கட்ட நடவடிக்கையில், லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம், குவஹாத்தி ஆகிய ஆறு விமான நிலையங்களுக்கான ஒப்பந்தத்தை அதானி குழுமம் பெற்றது. இதனைக் கடுமையாக விமர்சித்துள்ள ராகுல் காந்தி, "அதிகார வர்க்கத்திற்கு நெருக்கமான முதலாளிகளுக்கு மட்டுமே தனியார்மயமாக்கல் நன்மை பயக்கிறது. பொதுமக்களுக்கு அது தீங்கு விளைவிக்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.