புதுச்சேரி: சர்தார் வல்லபாய் பட்டேலின் 147வது பிறந்தநாளை முன்னிட்டு, தேசிய ஒற்றுமை தின நாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறைச்சாலைக்கு, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சென்றார். அவரை சிறைக் கைதிகள் பூக்களை தூவி வரவேற்றனர்.
இதனையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் உருவப்படத்தை துணை நிலை ஆளுநர் திறந்து வைத்தார். பின்னர் சர்தார் வல்லபாய் பட்டேல் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள 147 வகையான மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை தோட்டத்தை திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து ஆயுள் தண்டனை கைதிகளால் உருவாக்கப்பட்ட திராட்சைத் தோட்டத்தை பார்வையிட்ட ஆளுநர், கைதிகளை வெகுவாக பாராட்டினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “இன்று முக்கியமான தினம். சர்தார் வல்லபாய் பட்டேலின் 147 வது பிறந்த தினம். இன்று (அக் 31) என்னுடைய திருமண நாள். காலையில் கோயிலுக்குச் சென்று மணக்குள விநாயகரை தரிசித்து விட்டு, படைத்தவனை பார்த்துவிட்டு இங்கு படைப்பாளிகளை பார்க்க வந்துள்ளேன்” என்றார்.
இதன் பிறகு மாற்றுத்திறனாளிகளின் யோகாசன நிகழ்ச்சியை பார்வையிட்ட துணை நிலை ஆளுநர், யோகா செய்த மாற்றுத்திறனாளிகளுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார். பின்னர் நிகழ்ச்சி முடிந்து காரில் ஏறச் சென்றபோது, அங்கு இருந்த தண்டனை காலம் முடிந்து சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் 20க்கும் மேற்பட்ட ஆயுள் கைதிகள் ஆளுநர் தமிழிசை வரும் வழியில் மண்டியிட்டு, “எங்களை மன்னித்து விடுதலை செய்யுங்கள்” என காலில் விழுந்து கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த துணை நிலை ஆளுநர், “கடந்த காலங்களில் சிறைச்சாலையில் வதைபட்டு இருந்தவர்கள், இன்று விதை போட்டு வளர்க்கின்றனர். இதை பார்க்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இங்கு ஐந்து ஏக்கரில் பல்வேறு வகையான செடிகள், பழ வகைகளை வளர்த்து வருகின்றனர். இதனை வளர்க்கும்போது மனநிறைவு தரும் சைக்காலஜி ட்ரீட்மென்டாகவும் இது இருக்கும். மனநல மருத்துவ ஆலோசனையாகும். சிறைக் கைதிகள் யாராக இருந்தாலும் நியாயப்படி என்னென்ன கோரிக்கை இருக்கிறதோ, அது சரி செய்யப்படும்.
சிலவற்றை வெளிப்படையாக சொல்ல முடியாது. புதுச்சேரி மருத்துவமனை குறித்து ஆலோசனை நடத்தி உள்ளேன். அவர்களிடம் இது சம்பந்தமாக அறிக்கை கேட்டுள்ளேன். அதை டெல்லி சென்று சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து குறைகளை சுட்டிக்காட்டி நிவர்த்தி செய்வதற்காக சந்திக்க உள்ளேன்.
மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் விரைவாக செயல்படுத்த இருக்கிறேன்” என தெரிவித்தார். புதுச்சேரி காலப்பட்டு மத்திய சிறைச்சாலையில் ஆயுள் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என 350க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.
இதையும் படிங்க: தேவர் குருபூஜை: செல்வாக்கை ஓபிஎஸ் நிரூபித்தாரா? ஈபிஎஸ் ஏன் பசும்பொன்னிற்கு செல்லவில்லை?