நியூ யார்க் : பிரதமர் மோடி கலந்து கொண்ட ஐநா தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற யோகா தின விழா கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று 5 நாள் பயணமாக பிரதமர் மோடி அமெரிக்க சென்றுள்ளார். தனது முதல் நாள் பயணத்தில் அமெரிக்க பயணத்தில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
தொடர்ந்து நியூ யார்க் நகரில் உள்ள ஐநா தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற 9வது சர்வதேச யோகா தின விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவில் தூதர்கள், அதிகாரிகள், கல்வியாளர்கள், சுகாதார வல்லுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்துறை தலைவர்கள், ஊடகத் துறையினர், கலைஞர்கள், ஆன்மீகத் தலைவர்கள் மற்றும் யோகா பயிற்சியாளர்கள் உட்பட அனைத்து தரப்பு பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
ஏறத்தாழ 180க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் கலந்து கொண்டனர். இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற சர்வதேச யோகா தின விழா கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளது. அதிகளவிலான நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட யோகா விழா என்ற தலைப்பில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
யோகா விழாவில் தனித்துவம் வாய்ந்த வெள்ளை நிற டி-சர்ட் மற்றும் டிரவுசர் அணிந்து பிரதமர் மோடி கலந்து கொண்டார். விழாவில் பேசிய பிரதமர் மோடி,யோகா இந்தியாவில் உருவான உலகின் மிகவும் தொன்மையான பாரம்பரியம் என்றும், யோகா எந்த ஒரு நாடு, மதம் அல்லது இனத்துக்கும் சொந்தமானது அல்ல அனைவருக்குமானது என்று கூறினார்.
மேலும், யோகா காப்புரிமை, ராயல்டி கொடுப்பனவுகளுக்கு விதிவிலக்கு பெற்று உலக மக்கள் அனைவருக்குமானது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். யோகா அனைத்து வயது, பாலினம் மற்றும் உடற்பயிற்சி நிலைக்கு ஏற்றது என்றும் உண்மையிலேயே யோகா உலகளாவிய கலை என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடுவதற்கான இந்தியாவின் முன்மொழிவுக்கு முழு உலகமும் ஆதரவு அளித்த நிலையில் ஒட்டுமொத்த உலகமும் யோகாவிற்காக மீண்டும் ஒன்றிணைவதை பார்க்க வியப்புக்குரிய வகையில் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
மனிதநேயத்தின் சந்திப்பு முனையாக அனைவரும் ஒன்று கூடி உள்ளதாகவும், உங்கள் அனைவரையும் பார்த்ததில் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். ஒவ்வொரு தேசியமும் இங்கு பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதாக கூறிய பிரதமர் மோடி யோகா என்றால் ஒன்றுபடுவது என்று அர்த்தம் என்றும் அனைத்து தரப்பினரும் ஒன்றாக வருவது என்பது யோகாவின் மற்றொரு வடிவத்தின் வெளிப்பாடு என்று கூறினார்.
இதையும் படிங்க : "காப்புரிமைகளுக்கு விதிவிலக்கு பெற்று அனைவருக்குமானது யோகா" - பிரதமர் மோடி!