கடந்த 18ஆம் தேதி, புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் துறைமுகத்திலிருந்து மீன் பிடிப்பதற்காக 214 விசைப்படகுகள் கடலுக்குள் சென்றுள்ளன. தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஆரோக்கியஜேசு என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் அந்தோணிராஜ் என்பவரின் மகன் மெசியா, வெள்ளைச்சாமி என்பவரின் மகன் நாகராஜ், செல்லம் என்பவரின் மகன் செந்தில்குமார் மற்றும் நிக்சன் டார்வின் என்பவரின் மகன் சாம்சன் டார்வின் ஆகிய 4 மீனவர்களும் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர் .
ஆனால், அவர்கள் கரைக்குத் திரும்பவில்லை. இதனைத் தொடர்ந்து, இந்திய கடலோர காவல் படையின் ஒரு கப்பல், இந்திய கப்பல் படையைச் சேர்ந்த ஒரு கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணி நடைபெற்றது. இதற்கிடையே, இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் நான்கு மீனவர்கள் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், "இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் மூன்று இந்திய மீனவர்களும் இலங்கையை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இந்திய தூதரகம் சார்பில் கடும் கண்டனம் விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள இலங்கை தூதரகத்திற்கும் இதுகுறித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் தொடர்பான விவகாரத்தை மனிதநேயத்துடன் அணுகுவதற்கான அவசியத்தை வலியுறுத்திய அதே நேரத்தில், எங்களது வேதனையைும் தெரிவித்து கொள்கிறோம். இந்த விவகாரத்தில், இருநாட்டு அரசுகள் மேற்கொண்டுள்ள புரிதல்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இதுபோன்ற அசாம்பாவிதங்கள் இனி நடக்காது இருக்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.