டெல்லி: நாட்டின் 76ஆவது சுதந்திர தினத்தையொட்டி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது முர்பு, "நம் நாட்டிலும் அயல்நாடுகளிலும் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் 76ஆவது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா ஒரு சுதந்திர நாடாக 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. சுதந்திர இந்தியாவில் நாம் வாழ்வதைத் தங்களின் மகத்தான தியாகங்கள் மூலம் சாத்தியமாக்கிய அனைத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் நாம் தலைவணங்குவோம்.
ஜனநாயகத்தின் மெய்யான சக்தியை உலகம் தெரிந்து கொள்ள இந்தியா உதவியிருக்கிறது என்ற பெருமை நமக்குண்டு. கடந்த 75 வாரக்காலமாக நமக்குச் சுதந்திரம் பெற்றுத் தந்த இத்தகைய உன்னதமான நோக்கங்களை நாடு கொண்டாடி வந்துள்ளது. இப்போது இல்லந்தோறும் மூவண்ணக் கொடி இயக்கத்தை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. நாட்டின் அனைத்து இடங்களிலும் இந்திய மூவண்ணக்கொடிகள் பறந்து கொண்டிருக்கின்றன. தனது மெய்யான ஆற்றலை செயல்படுத்தியிருக்கும் ஒரு இந்தியாவான தற்சார்பு பாரதத்தை உருவாக்கும் பாதையில் நாம் பயணிக்கத் தொடங்கி விட்டோம்.
உலகின் மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதாரங்களில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. இந்தியாவின் ஸ்டார்ட் அப் சூழலமைப்பு உலகிலேயே மிகவுயரிய இடத்தில் இருக்கிறது. நமது நாட்டில் ஸ்டார்ட் அப்புகளின் வெற்றி, அதுவும் குறிப்பாக யூனிகார்ன்களின் எண்ணிக்கையில் வளர்ச்சி, நமது தொழில்துறை முன்னேற்றத்திற்கான ஒரு ஒளிரும் எடுத்துக்காட்டு.
கடந்த சில ஆண்டுகளில், அடிப்படை மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டில், இதுவரை காணாத முன்னேற்றம் காணப்பட்டிருக்கிறது. பொருளாதார வெற்றி என்பது வாழ்க்கையை வாழ்வதில் சுலபத்தன்மைக்கும் வழிவகுக்கிறது. நூதனமான மக்கள்நல முன்னெடுப்புக்களுக்குப் பக்கபலமாக பொருளாதார சீர்திருத்தங்கள் இருக்கின்றன. ஏழைகளுக்குச் சொந்தமாக ஒரு இல்லம் என்பது இனி ஒரு கனவு அல்ல, பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டம் காரணமாக, பலருக்கு இது மெய்ப்பட்டு வருகிறது. அதே போல, ஜல்ஜீவன் இயக்கத்தின்படி, அனைத்து இல்லங்களுக்கும் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து குடிநீர்க் குழாய் இணைப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் பாலின சமத்துவமின்மை குறைந்து வருகிறது, பெண்கள் பல தடைகளைத் தகர்த்து முன்னேறி வருகிறார்கள். சமூக-அரசியல் செயல்பாடுகளில் அவர்களின் அதிகரித்துவரும் பங்கெடுப்பு தீர்மானிப்பவையாக அமைகிறது. நாட்டின் மிகப்பெரிய நம்பிக்கையே நமது பெண்கள் தாம். அண்மையில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இவர்களில் சிலர் நாட்டிற்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள். சர்வதேசப் போட்டிகளில் தங்கள் செயல்பாடுகள் காரணமாக இந்தியாவின் விளையாட்டு வீரர்கள் பெருமிதம் சேர்த்து வருகிறார்கள் என்பதை நாம் அறிவோம்.
நமது வெற்றியாளர்களில் பெரும்பாலானோர், சமூகத்தின் அடித்தட்டுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். போர்விமானங்களின் விமானிகள் முதல், விண்வெளி விஞ்ஞானிகள் வரை நமது பெண்கள் புதிய சிகரங்களை அடைந்து வருகிறார்கள். இந்த நேரத்தில் நமது தேசத்தின் பாதுகாப்பு, பராமரிப்பு, முன்னேற்றம், நல்வளம் ஆகியவற்றிற்காக நம்மாலான அனைத்தையும் அளிக்க நாம் உறுதிமொழி ஏற்க வேண்டும். தாய்த்திருநாட்டிற்காகவும், சககுடிமக்களின் மேம்பாட்டிற்காகவும் அனைத்தையும் தியாகம் செய்ய, தேசியவாதிக்கவி விடுத்த அறைகூவல் இது.
2047ஆம் ஆண்டிற்கான இந்தியாவை உருவாக்கவிருக்கும் நாட்டின் இளைஞர்கள், இந்த ஆதர்சங்களைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்று சிறப்பு வேண்டுகோளாக அவர்களிடம் முன்வைக்கிறேன். நாட்டின் ஆயுதப் படையினருக்கும், அயல்நாடுகளில் இருக்கும் இந்திய தூதரகங்களைச் சேர்ந்தவர்களுக்கும், இந்தியாவிற்குத் தொடர்ந்து பெருமை சேர்த்துவரும் அயல்நாடுவாழ் இந்திய வம்சாவழியினருக்கும் நான் சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் என் சிறப்பான நல்வாழ்த்துக்கள்" என்றார்.
இதையும் படிங்க: பிரிவினையின் வலிகளை ஒருபோதும் மறக்க முடியாது.. பிரதமர் மோடி