கரோனா தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் பணியில் உலகின் பல நாடுகள் முயற்சி செய்துவருகின்றன. அந்த வரிசையில், செரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து கரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. செரம் இன்ஸ்டிடியூட்தான் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் தடுப்பூசிகளை தயாரித்துவருகிறது.
இதனிடையே, கரோனா தடுப்பூசி குறித்த ஆய்வு பணிகளை கண்காணிக்கும் நோக்கில் செரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவுக்கு பிரதமர் மோடி நவம்பர் 28ஆம் தேதி செல்லவுள்ளார். இந்நிலையில், அவரின் பயணத்தை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு மற்றும் மற்ற பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சாலை மற்றும் இந்திய விமானப் படை மூலம் அவர் பயணிக்கவுள்ளதால் அதற்கான முன்னோட்ட பணிகள் இன்று (நவம்பர் 27) நடைபெற்றன.
முன்னதாக, நவம்பர் 24ஆம் தேதி, பல்வேறு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது, கரோனா தடுப்பூசிகளை சேகரித்து வைப்பதற்கான குளர் சேமிப்பு கிடங்குகளை தயார் செய்து வைக்கும்படி மோடி ஆலோசனை கூறியுள்ளார். தடுப்பூசிகளை விநியோகம் செய்வதற்கான திட்டங்களை வகுத்து அதனை மத்திய அரசுக்கு அனுப்பும் படி அறிவுறுத்தியிருந்தார்.