சாமராஜ்நகர் (கர்நாடகா): கர்நாடக மாநிலம், சாமராஜ்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது தோட்வானி மலைக்கிராமம். இந்த மலை கிராமத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி சாந்தலாவுக்கு நள்ளிரவில் பிரசவ வலி ஏற்பட்டது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல போக்குவரத்து வசதி இல்லாததால், அக்கிராமத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் 8 கி.மீ., தொலைவில் உள்ள சுல்வாடி மருத்துவமனைக்கு 'டோலி' கட்டி தூக்கிச்செல்ல முடிவு செய்தனர்.
இதையடுத்து நள்ளிரவு 1 மணியளவில் புலிகள், சிறுத்தைகள், யானைகள் அச்சுறுத்தல் உள்ள காட்டுப்பாதையில் தூக்கிச் சென்றனர். காலை 6 மணியளவில் மருத்துவமனையை அடைந்த நிலையில், அங்கு மருத்துவர்கள் சாந்தலாவுக்கு சிகிச்சை மேற்கொண்டு, எந்தச் சிக்கலும் இல்லாமல் குழந்தை பிறந்தது.
ஆபத்தான காட்டுவழியில் டோலி கட்டி தூக்கிச் செல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டது. கிராமங்களில் வசிப்பவர்களுக்கு எந்தப் போக்குவரத்து வசதியும் அலுவலர்கள் செய்துதரவில்லை எனப் பலர் கடுமையாகச் சாடினர்.
முன்னதாக கர்நாடக அரசு இப்பகுதியில் 'ஜன-மன' என்ற திட்டத்தை தொடங்கியது. இதன் மூலம் கிராம மக்களின் அவசர தேவைக்காக 5 ஜீப்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனாலும், சிக்னல் கோளாறு காரணமாக ஃபோனில் தொடர்பு கொள்ள முடியவில்லை என அலுவலர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: கருவில் இருக்கும் குழந்தையைத் தத்தெடுக்கக்கூடாது - பஞ்சாப், ஹரியானா நீதிமன்றங்கள் அறிவிப்பு!