புதுச்சேரியில் உள்ள 5 நகராட்சிகள் 10 பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த தேர்தலில் பட்டியலினத்தவர்களுக்கு முறையான ஒதுக்கீடு வழங்கப்படாததால் தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்ககோரி முத்தியால்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணைய அறிவிப்பில், பட்டியலினத்தவர்களுக்கு வார்டுகள் முறையாக ஒதுக்கப்படவில்லை என்றும் பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் வார்டுகளை அவர்களுக்கு ஒதுக்காமல் குறைந்த எண்ணிக்கையில் வசிக்கும் வார்டுகளை அவர்களுக்கு ஒதுக்கி உள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த தவறுகளை சரி செய்யாமல் தேர்தலை நடத்த முடியாது என தெரிவித்த நீதிபதிகள்,வேட்புமனு தாக்கலை அக்டோபர் 4ஆம் தேதிக்கு தள்ளிவைக்க உத்தரவிட்டனர்.
மேலும், மனுவுக்கு பதில் அளிக்கும்படி புதுச்சேரி அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்டு விசாரணையை நாளை (செப்டம்பர் 30) தள்ளிவைத்தனர்.