சமஸ்திபூர் (பீகார்): பீகார் மாநிலம், அஹர் கிராமத்தில் வயதான தம்பதியினர் தங்களது மகனின் உடலை மருத்துவமனையிலிருந்து மீட்க தெருக்களில் பணம் கேட்டு யாசகம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சமஸ்திபூர் மாவட்டம் அஹர் கிராமத்தைச் சேர்ந்தவர், மகேஷ் தாக்கூர். இவரின் மகன் சஞ்சீவ் தாக்கூர் (25), மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறுப்படுகிறது.
கடந்த மே 25ஆம் தேதி சஞ்சீவ் வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார். உறவினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து ஜூன் 7ஆம் தேதி முஸ்ரிகராரி காவல் நிலையப்பகுதியில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவரின் உடலை காவல் துறையினர் மீட்டு சதர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த பெற்றோர் மருத்துவமனைக்குச் சென்று அவர்களது மகன் என அடையாளம் கண்டனர். இதையடுத்து பெற்றோர் மகனின் உடலை ஒப்படைக்க மருத்துவமனை ஊழியர்களிடம் (பிரேதப் பரிசோதனை பிரிவு ஊழியர்கள்) கேட்டுள்ளனர். ஊழியர்கள் உடலை ஒப்படைக்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவ்வளவு தொகையை கொடுக்க முடியாது என பெற்றோர் தெரிவித்தும் ஊழியர்கள் உடலை கொடுக்க மறுத்துள்ளனர். செய்வதறியாது தவித்த ஏழைப்பெற்றோர் தன் மகனின் உடலை மீட்க தெருக்களில் பணம் கேட்டு யாசகம் செய்துள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இந்தநிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சதர் மருத்துவமனை மருத்துவர் சவுத்ரி கூறியுள்ளார். மருத்துவர் சவுத்ரி கூறுகையில், "சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பின் குற்றம்புரிந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
சதர் மருத்துவமனையில் ஊழியர்கள் லஞ்சம் கேட்பது புதிதல்ல என்று மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் கடந்த மாதமும், சதர் மருத்துவமனையின் பிரேத பரிசோதனை ஊழியர்கள் உறவினர்களிடம் பணம் கேட்கும் வீடியோ வெளியானது. ஆனால், மருத்துவமனை நிர்வாகம் ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ராஜஸ்தானில் விசித்திரம்: ஆட்டைக்கொன்ற தெருநாய்களை 'பவாரியா கும்பலை' ஏவி தீர்த்துக்கட்டிய விவசாயி!