டெல்லி: கடந்த 2019ஆம் ஆண்டு, பாஜக எம்.பி. ராகேஷ் சின்ஹாவால் "மக்கள் தொகை கட்டுப்பாட்டு மசோதா" நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டது. தம்பதிகள் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றெடுப்பதைத் தடுக்கும் நோக்கில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டது என்றார்.
இரண்டு குழந்தைகளுக்கும் மேல் பெற்றுக்கொள்ளும் தம்பதிகள், அரசு வேலை, மானியங்கள் உள்ளிட்ட அரசின் பல்வேறு திட்டங்களின் பலன்களைப் பெற முடியாது என இந்த மசோதா கூறுகிறது. இந்த மசோதா பல முறை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டும் இதுவரை நிறைவேறவில்லை.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய மத்திய இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார், மக்கள்தொகையை கட்டுப்படுத்த எந்தவொரு சட்ட நடவடிக்கை குறித்தும் மத்திய அரசு பரிசீலிக்கவில்லை எனத்தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பேசிய மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாஜக எம்.பி.ரவி கிஷண், 'மக்கள் தொகை கட்டுப்பாட்டு மசோதாவை, தனி நபர் மசோதாவாக தாக்கல் செய்ய உள்ளதாக’ தெரிவித்தார்.
இதற்குப்பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத்தெரிவித்திருந்தனர். நான்கு குழந்தைகளுக்கு தந்தையான ரவி கிஷண், மக்கள் தொகை கட்டுப்பாட்டு மசோதா குறித்துப்பேசுகிறார் என இணையவாசிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
4க்கும் மேற்பட்ட குழந்தைகளைக்கொண்ட பாஜக எம்.பிக்கள்: மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்து பாஜகவினர் வலியுறுத்தி வரும் நிலையில், பாஜகவில் உள்ள 39 எம்.பி.க்களுக்கு 4 அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளதாக சுவாரஸ்யத் தகவல் தெரியவந்துள்ளது.
பிற அரசியல் கட்சிகளைச்சேர்ந்த 25 எம்.பி.க்களுக்கும் நான்கிற்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள எம்.பி.க்களில் 171 பேருக்கு இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்கின்றனர். இதனால், ஒரு வேளை இந்த மசோதா கொண்டுவரப்பட்டாலும், இந்த எம்.பி.க்கள் அதற்கு ஆதரவாக வாக்களிப்பார்களா? என்ற கேள்வி எழுகிறது.
இதுதொடர்பாகப்பேசிய அரசியல் நிபுணர் யோகேஷ் மிஸ்ரா, "சட்டப்பூர்வம் என்ற சொல்லுக்கு அரசியலில் இடமில்லை. அமைச்சர்கள் ஊழல் வழக்குகளில் சிக்குவதைப்பார்த்து வருகிறோம். அதனால், அறம் மற்றும் கொள்கைகளுக்கு அரசியலில் இடமில்லை. இருப்பினும், இந்த மசோதாவை யார் கொண்டு வருகிறார்கள் என்பது முக்கியப்பிரச்னை.
இந்த மசோதா நிறைவேற்றப்படுமா? என்பதை காலம்தான் தீர்மானிக்கும். ஆனால் இந்தப் பிரச்னையை புறக்கணிக்க முடியாது" என்று கூறினார்.
இதையும் படிங்க:முதல் குடிமகள் முர்முவின் அதிகாரங்கள் என்னென்ன...?