புதுச்சேரி:புதுச்சேரி அரியாங்குப்பம் தபால்கார வீதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் தியாகு என்கிற தியாகராஜன். 38 வயதான இவர் தனது மனைவி பச்சைவாழி மற்றும் லட்சுமிதேவி, ஆகாஷ் ஆகிய இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் ஓட்டுநர் தியாகராஜனுக்கு ஆட்டோ ஓட்டும் தொழிலில் பெரிய அளவில் வருமானம் வராததால் ஆட்டோ ஓட்டுவதை விட்டுவிட்டு, எலட்ரிசியனாக வேலை செய்து வந்தார்.
இருப்பினும் வருமானம் சரிவர இல்லாததால் கடன் தொல்லை காரணமாக, குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டு தியாகராஜன் வீட்டிற்கு வந்துள்ளார். இதற்கிடையே தியாகராஜன் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராத நிலையில் அருகில் உள்ளவர்கள் தியாகராஜனின் வீட்டை தட்டி பார்த்துள்ளனர்.
அப்போது வீட்டு கதவு திறக்காததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். பின்னர் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பச்சைவாழி மற்றும் இரண்டு குழந்தைகள் இறந்து கிடந்த நிலையில் தியாகராஜன் தற்கொலை செய்து இறந்து கிடந்தார்.
இதனையடுத்து நான்கு பேரின் உடல்களை மீட்டு காவல்துறையினர் பிரதே பரிசோதனைக்காக புதுவை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவலில் கடன் தொல்லை காரணமாக தியாகராஜன், தனது மனைவி, குழந்தைகளை கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க:கொடூர குற்றங்களில் சிறார்கள் தப்ப முடியாது - முன்னுதாரணமாகும் நெல்லை மாணவன் கொலை வழக்கு