புதுச்சேரி: பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "புதுவை பல்கலைக்கழகத்தின் பசுமை ஆற்றல் தொழில்நுட்ப துறையில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், உபயோகிக்கப்பட்ட காகித தேநீர் கோப்பைகளில் (spent paper teacups) கொண்டு எளிய வேதியியல் செயலாக்கத்தின் மூலம் செலினியம் (Selenium) கலந்த மெசோபோரஸ் கார்பன் மின்முனையை உருவாக்கி அதன் மூலமாக பேட்டரி ஒன்றை உருவாக்கியுள்ளார்.
பேராசிரியர் பெ. ஏழுமலை தலைமையில், ஆராய்ச்சியாளர் செல்வி வை. சங்கர் தேவி அவர்கள் ஒரு எளிய முறையிலான வேதியியல் செயலாக்கத்தின் மூலம் உயர் சக்தி கொண்ட மின்முனையை (Electrode) உருவாக்கி அதன் மூலம் அதிக ஆற்றல் திறன் கொண்ட லித்தியம் - ஆக்சிஜன் பேட்டரியை (LiO2) இதன் மூலம், அவர் பல்கலைக்கழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இந்த அட்டைப்படத்தில், கீழ் கண்டவை சித்தரிக்கப்பட்டுள்ளது: லித்தியம் - ஆக்சிஜன் பட்டன் பேட்டரியின் புகைப்படம், செலினியம் சேர்க்கப்பட்ட கார்பனை நேர்மின் முனையாகவும் (cathode) லித்தியம் உலோத்தை எதிர்மின் முனையாகவும் (Anode) கொண்ட பட்டன் பேட்டரியின் குறுக்கு வெட்டு புகைப்படம், சார்ஜ் மற்றும் டிஸ்சார்ஜிங் செய்யும் போது பேட்டரிக்கு தேவைப்படும் காற்றை (O2) எடுக்கும் இயற்கைச் சூழல், உபயோகிக்கப்பட்ட காகித கோப்பைகளிலிருந்து செலினியம் - சேர்க்கப்பட்ட கார்பன் இவை அனைத்தும் ஆரோவில் குலோப் (Aurovile globe) முன்னணியில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
நவீன மின்னணு சாதனங்களின் ஆற்றல் தேவைக்கும், மின்சார வாகன வளர்ச்சிக்கும் மற்றும் மரபுசாரா ஆற்றலை பயன்படுத்துவதில் வளர்ந்து வரும் ஆர்வம் ஆகியவை, மின்வேதியியல் மூலமாக ஆற்றலை சேமிக்கும் பேட்டரி சாதனங்களுக்கு மிகப்பெரிய தேவையை வழிவகுத்துள்ளது. தற்போதைய சாந்தையில் உள்ள லித்தியம் பேட்டரியின் ஆற்றல் திறனை மேம்படுத்த, குறைந்த எடை அல்லது எடையே இல்லாத நேர்மின் முனைகளை (cathode) பயன்படுத்துவது அவசியம்.
எனவே, சமீபத்தில் லித்தியம் பேட்டரிக்கு அப்பார்ப்பட்ட பேட்டரிகளான லித்தியம் - சல்பர் (Li-S) மற்றும் லித்தியம் - ஆக்சிஜன் (Li-O2) போன்ற பேட்டரிகளுக்கு அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இவற்றில் லித்தியம் - ஆக்சிஜன் பேட்டரி (Li-O2) அதிகபட்சமாக 3500 Wh kg - 1 ஆற்றல் (காற்றின் எடையை உள்ளடக்கியது) கொண்டுள்ளது. இது வழக்கமான லித்தியம் - அயன் பேட்டரியை விட பத்து மடங்கு அதிக ஆற்றலைக் கொண்டுள்ளதாகும். மேலும், இது வளிமண்டலக் காற்றில் இருக்கும் ஆக்சிஜனை (O2) நேர்மின் முனையாக (cathode) பயன்படுத்துவதால் இவற்றின் விலை மிகவும் குறைந்ததாகவும் மற்றும் இலகுவானது.
இந்த ஆராய்ச்சி கட்டுரையில், உபயோகிக்கப்பட்ட காகித தேனீர் கோப்பைகளில் (spent paper tea cups) கொண்டு எளிய வேதியியல் செயலாக்கத்தின் மூலம் செலினியம் (Selenium) கலந்த மெசோபோரஸ் கார்பன் உருவாக்கப்பட்டது. உருவாக்கப்பட்ட மெசோபோரஸ் கார்பனை பயன்படுத்தி 1600 mA h g-1 ஆற்றல் திறன் கொண்ட CR2032 பட்டன் வகை 3.1 V லித்தியம் - ஆக்சிஜன் பேட்டரி உருவாக்கப்பட்டு சோதித்து காட்டியுள்ளனர்.
பேராசிரியர் ஏழுமலை மற்றும் அவரது குழுவினர் சமீபத்தில் ஆறு இந்திய காப்புரிமைகளை எரிசக்தி சேமிப்பு மின்முனை சாதனங்களில் தாக்கல் செய்துள்ளனர். மேலும், லித்தியம் - ஆக்ஸிஜன் பேட்டரி மற்றும் சோடியம்-ஆக்ஸிஜன் பேட்டரி உருவாக்க இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையிடமிருந்து (DST, Govt of India) பெரும் நிதியை ஆராய்ச்சி மற்றும் சோதனைக்காக பெற்றுள்ளனர். பேட்டரிமற்றும் சூப்பர் கெபாசிட்டர் உருவாக்கம் மற்றும் சோதனைக்காக அவரது ஆய்வகத்தில் புத்தம் புதிய நவீன கருவி வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது" என குறிப்பிட்டிருந்தது.
தொடர்ந்து, பேராசிரியர் பெ.ஏழுமலை மற்றும் அவரது குழுவினரின் முயற்சிக்கு துணைவேந்தர் குர்மீத் சிங் அவரை பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தார். மேலும் பசுமை ஆற்றல் துறையின் தலைவர் பேராசிரியர் அருண் பிரசாத் ஆராய்ச்சியாளர்களின் முயற்சியை வெகுவாக பாராட்டினார்.