லக்னோ : உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு பிப்.10ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன.31) காணொலி வாயிலாக தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது, “கடந்த 5 ஆண்டுகள் உத்தரப் பிரதேசத்தில் குண்டர்கள் ஆட்சி நடைபெற்றது” என மறைமுகமாக தாக்கிப் பேசினார்.
தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில், “ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, இங்கு 'தபாங்' (ஆதிக்கம், ரௌடியிசம்) மற்றும் 'டங்காய்' (கலவரக்காரர்கள்) நபர்களின் ஆட்சி நடைபெற்றது. அவர்கள் சொல்வதுதான் ஆணை. ஆங்காங்கே வணிகர்கள் சூறையாடப்பட்டனர். ஒருபுறம், பெண் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர பயந்தனர். மறுபுறம் மாஃபியாக்கள் சுதந்திரமாக சுற்றித் திரிந்தனர்.
தற்போது காலம் மாறிவிட்டது. யோகி ஆதித்யநாத் ஆட்சியில் பெண் குழந்தைகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். வன்முறையாளர்கள், ரௌடிகள் அடக்கி ஒடுக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
தொடர்ந்து அகிலேஷ் யாதவ் கனவுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய நரேந்திர மோடி, “யோகி ஆதித்யநாத் மாநிலத்தின் வளர்ச்சிக்காக விழிப்புடன் உழைக்கிறார். தூங்குபவர்கள் கனவு காண்கிறார்கள்” என்றார்.
உத்தரப் பிரதேச தேர்தல் பரப்புரையில் ஸ்ரீ ராமரும், கிருஷ்ணரும் முக்கியத்துவம் பெற்றுவருகின்றனர். முன்னதாக தேர்தல் பரப்புரையின்போது அகிலேஷ் யாதவ், “என் கனவில் கிருஷ்ணர் வருகிறார்” என்றார். இதற்கு உடனே எதிர்வினையாற்றிய யோகி, “கம்சன் கனவில் எப்போதும் கிருஷ்ணர் வருவார், ஏனெனில் கம்சனின் தூக்கத்தை கெடுத்ததே கிருஷ்ணர் தானே” எனப் பதில் அளித்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
உத்தரப் பிரதேசத்தில் பிப்.10ஆம் தேதி முதல் மார்ச் 3ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10ஆம் தேதி எண்ணப்படுகின்றன.
இதையும் படிங்க : மதத்தில் புரட்சி செய்த மகான்... ராமானுஜர் சிலையை திறந்துவைக்கிறார் நரேந்திர மோடி!