டெல்லி: டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றுமாசு அதிகரித்து வருகிறது. டெல்லி மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் காற்றின் தரம் மோசமான நிலையில் உள்ளது. இன்று(நவ.4) காலை நிலவரப்படி, டெல்லியில் காற்றின் தரக் குறியீட்டு எண் (AQI) 400ஐ தாண்டி பதிவானது.
இது காற்றின் தரம் இரண்டாவது நாளாகத் தொடர்ந்து அபாய நிலையில் நீடிப்பதைக் காட்டுகிறது. காற்று மாசுப் பிரச்னையின் எதிரொலியாக, டெல்லியில் தொடக்கப்பள்ளிகளுக்கு காலவரையின்றி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 50 விழுக்காடு ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் காற்றின் தரம் மோசமானதற்கு ஆம்ஆத்மி அரசுதான் காரணம் என பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஆம்ஆத்மி ஆட்சியில், அறுவடைக்குப் பிந்தைய தாள்கள் எரிக்கப்படுவது 34 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும், ஆம்ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைநகரை எரிவாயு மண்டலமாக மாற்றிவிட்டார் என்றும், அவர் டெல்லியின் எதிரி என்றும் பாஜகவினர் கடுமையாக சாடினர்.
கெஜ்ரிவால் பார்ட் டைம் முதலமைச்சர் என்றும், அவர் டெல்லி மக்களின் நலனைவிட தேர்தலில்தான் அதிக கவனம் செலுத்துகிறார் என்றும் பாஜக எம்.பி. மனோஜ் திவாரி குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அவருடன் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானும் உடனிருந்தார். அப்போது பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், "டெல்லியை எரிவாயு மண்டலமாக மாற்றியது யார் என்பது அனைவருக்கும் தெரியும். அதோடு காற்றுமாசு என்பது வட இந்தியா முழுவதும் உள்ள ஒரு பிரச்னை. ஆனால், காற்று மாசுபாட்டிற்கு பஞ்சாப் அரசும், ஆம் ஆத்மியும் மட்டுமே காரணம் என்று காட்டப்படுகிறது. காற்று மாசை வைத்து அரசியல் மட்டுமே நடத்தப்படுகிறது.
இதற்கான தீர்வு பற்றி யாரும் பேசுவதில்லை. அரசியல் கட்சிகளை குறைகூறும் நேரம் இது இதுவல்ல. பிரச்னைக்குத் தீர்வு காணும் நேரம் இது. கெஜ்ரிவாலையோ அல்லது பஞ்சாப் அரசையோ குறைகூறுவது பயனளிக்காது" என்று தெரிவித்தார்.