கன்னட திரையுலகின் பவர் ஸ்டாராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். இவர் பழம் பெரும் நடிகர் ராஜ்குமாரின் மகன் ஆவார்.
இந்நிலையில், இன்று (அக்.29) காலை புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இசிஜி உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை மருத்துவர்கள் மேற்கொண்டனர்.
இந்நிலையில், சிகிச்சை பலன்றி புனித் ராஜ்குமார் (46) உயிரிழந்தார். அவருக்கு வயது 46. அவரது மறைவு கன்னட திரையுலகினர் மட்டுமல்லாது இந்திய திரையுலகினரையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் மட்டுமல்லாமல், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் புனித் ராஜ்குமார். 29 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர், 1975 ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி சென்னையில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புனித் ராஜ்குமாரின் மறைவையடுத்து திரைபிரபலங்கள், ரசிகர்கள் பலர் சமூகவலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "புனித் ராஜ்குமார் ஒரு பிரகாசமான நட்சத்திரம். அவரது குடும்பத்தினருக்கும், அவரது எண்ணற்ற ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு கன்னட திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும் அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அற்புதமான மனிதர் புனித் ராஜ்குமார். அனைவராலும் அன்புடன் அப்பு என்று அழைக்கப்பட்டவர். மிக விரைவில் அவர் நம்மை விட்டு பிரிந்துவிட்டார்"என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கன்னட பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் உயிரிழப்பு!