கேரளா: கேரள தங்கக் கடத்தில் விவகாரத்தில் முதலமைச்சர் பினராய் விஜயன், முன்னாள் முதன்மைச் செயலர் சிவசங்கருக்கு மட்டுமல்லாமல், பினராய் விஜயனின் மனைவி கமலா மற்றும் அவர்களது மகள் வீணா ஆகியோரும் சம்பந்தப்பட்டுள்ளதாக, வழக்கின் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம் அளித்துள்ள சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்வப்னா சுரேஷின் இந்த குற்றச்சாட்டை முதலமைச்சர் பினராயி விஜயன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசியல் நோக்கத்திற்காகவே இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அவர்களது நோக்கத்தை மக்கள் ஏற்கெனவே முறியடித்துவிட்டனர். இந்த நிலையில் சிறிது இடைவெளி விட்டு மீண்டும் மீண்டும் ஒரே குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
இந்த குற்றச்சாட்டில் துளி கூட உண்மை இல்லை. இந்த பொய்களை பரப்புவதன் மூலம் கேரள அரசை அழித்துவிடலாம் என்று நினைத்தால், அது வீண் கற்பனை என்பதை நினைவுபடுத்துகிறேன். இதுபோன்ற அவதூறுகள் மூலம் ஆதாயம் தேடலாம் என நினைப்பவர்களுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என நம்புகிறேன். அரசை களங்கப்படுத்தும் நோக்கில் பரப்பப்படும் இந்த பொய் குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் நிராகரிப்பார்கள்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: Swapna Suresh: பினராய் விஜயன் மட்டுமல்ல.. புயலை கிளப்பும் ஸ்வப்னா சுரேஷ்!