ஜம்மு-காஷ்மீர்: வடக்கு காஷ்மீரின் சோபூர் பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நவ.4 (வெள்ளிக்கிழமை) மாலை ஷோ பைசல் மார்க்கெட் பகுதியில் சோபூர் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பேருந்து நிலையம் அருகே உள்ள ஷா பைசல் நோக்கி வந்த நபர் மீது சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அவர் தப்பியோட முயன்றார். அவரை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர். அவரிடம் இருந்த கைப்பையை பரிசோதனை செய்த போது அதில் ஒரு கைத்துப்பாக்கி, ஒரு மெகசீன் மற்றும் சில தோட்டாக்கள், IED வெடிக்கும் கருவி உள்ளிட்டவை மீட்கப்பட்டன" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், முதற்கட்ட விசாரணையில், அவர் ஹம்ரே பட்டான் பகுதியை சேர்ந்த முஷ்டாக் அமகது வாணியின் மகன் ரிஸ்வான் முஷ்டாக் வாணி என்பது தெரியவந்துள்ளது. அவர், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா(LET) அமைப்பை சேர்ந்தவர் என்றும், உள்ளூர் மக்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முஷ்டாக் வாணியிடம் நடத்திய விசாரணையில் தாப்பர் பட்டான் பகுதியை சேர்ந்த அவரது கூட்டாளியான ஹபிபுல்லா பர்ராவின் மகன் ஜமீல் அகமது பர்ரா என்பவரையும் கைது செய்த போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.