டெல்லி: டெல்லி கஞ்சவாலா பகுதியில் புத்தாண்டு அதிகாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில், அஞ்சலி(23) என்ற இளம்பெண் 12 கிலோ மீட்டர் காரில் சிக்கியபடி இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் காரில் சென்ற 5 இளைஞர்களை கைது செய்தனர். இந்த வழக்கில் அஞ்சலி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக முதலில் கூறப்பட்ட நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவ்வாறு கூறப்படவில்லை.
இதனிடையே அஞ்சலியின் தோழி எனக் கூறிக்கொண்ட நிதி என்ற பெண், தானும் அஞ்சலியும் சென்றபோது இந்த விபத்து நடந்ததாகவும், அஞ்சலி குடித்துவிட்டு இருசக்கர வாகனத்தை அடம்பிடித்து ஓட்டியதாகவும் தெரிவித்தார். விபத்தின்போது தான் கீழே விழுந்துவிட்டதாகவும், அஞ்சலி காரில் சிக்கியதைப் பார்த்து பயந்து ஓடிவிட்டதாகவும் கூறினார்.
இந்த நிதியின் பேச்சு பொய் என்றும், இவர் யாரையோ காப்பாற்றுவதற்காக நாடகமாடுகிறார் என்றும் அஞ்சலியின் பெற்றோர் தெரிவித்தனர். அதேபோல் கைதானவர்களிடம் போலீஸ் நடத்திய விசாரணையில், அஞ்சலி காரில் சிக்கியது முதலில் தெரியாது என்றும், பிறகு தெரியும் என்றும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர். இந்த வழக்கில் காரில் இருந்த ஐந்து பேரும் தப்பிக்க உதவியதாக, மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர். இதில் அங்குஷ் என்பவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், வழக்கில் முக்கியமான சிசிடிவி காட்சிகளை போலீசார் தேடி வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகனம் மீது கார் மோதிய சிசிடிவியைத் தேடி வருகின்றனர். இதற்காக அப்பகுதியில் உள்ள சுமார் 300 சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் சேகரித்து ஆய்வு செய்து வருவதாகத் தெரிகிறது.
இதனிடையே கைதான ஆறு பேரும் இன்று காணொலி வாயிலாக டெல்லி ரோகினி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்படவுள்ளதாகவும், விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் காவல் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.