புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் இருசக்கர வாகனங்கள் திருட்டுச் சம்பவம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின்பேரில் இருசக்கர வாகனம் திருட்டில் ஈடுபட்டவர்களைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
இந்நிலையில் காவல் உதவி ஆய்வாளர் முருகன் தலைமையிலான காவல் துறையினர் புதுச்சேரி எல்லையான காலாப்பட்டு கனகசெட்டிகுளம் பகுதியில் நள்ளிரவில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அப்பாச்சி (APACHE) இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்ததால் சந்தேகமடைந்த காவல் துறையினர், மூவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ், கடலூர் நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த தீனா என்கிற மணிகண்டன், திண்டிவனம் ரெட்டனையைச் சேர்ந்த பரத் என்பது தெரியவந்தது.
மேலும், இவர்கள் மூவரும் வந்த இருசக்கர வாகனம் திருட்டு வாகனம் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. தொடரந்து அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், அவர்கள் புதுச்சேரிக்கு வரும்போது புதுச்சேரியிலிருந்து விலை உயர்ந்த கேடிஎம் (KTM), பல்சர் (PULSAR), அப்பாச்சி (APACHE) போன்ற விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்றதை ஒப்புக்கொண்டனர்.
இதனையடுத்து இவர்கள் மறைத்துவைத்திருந்த சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான 14 விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களைப் பறிமுதல்செய்த காவல் துறையினர், குற்றவாளிகள் மூவரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தன் தாயுடன் திருமணம் மீறிய உறவில் இருந்த திமுக பிரமுகரைக் கொன்ற மகன் கைது