திரிபுரா: திரிபுராவில் உள்ள இந்திய வங்காளதேசம் வழியாக சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த 14 பங்களாதேஷைச் சேர்ந்த நபர்களை போலீசார் நேற்று கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, இந்தியாவில் சட்ட விரோதமாக நுழைந்து, தெற்கு திரிபுராவில் உள்ள சப்ரும், பைஸ்னாவ்பூர் பகுதியில் இருந்த 14 பங்களாதேஷ் சிட்டிசன்ஸ் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 6 குழந்தைகள், 6 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் ஆவார்கள். இவர்கள் கடந்த சனிக்கிழமையன்று யாருக்கும் தெரியாமல் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்து, தெற்கு திரிபுராவில் உள்ள சப்ரும் உட்பிரிவில் உள்ள பைஸ்னாவ்பூரில் இருக்கும் ஒரு வீட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.
பின்னர் இது தொடர்பாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற பிஎஸ்எஃப் (BSF) மற்றும் திரிபுரா போலீசார் அதிரடியாக நடவடிக்கை எடுத்து, அந்த 14 பங்களாதேஷ் ஊடுருவல்காரர்களையும் கைது செய்துள்ளனர். இவ்வாறு தற்போது கைது செய்யப்பட்ட அந்த 14 நபர்களும் நாளை (நவ.14) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கடந்த நவம்பர் 8ஆம் தேதி என்ஐஏ (NIA) அதிகாரிகள் மற்றும் மாநில காவல்துறை அதிகாரிகள் வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய உதவும் தரகர்களுக்கு எதிராக மிகப்பெரிய சோதனையை நடத்தினர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், இவ்வழக்கில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டு, கிட்டத்தட்ட 47 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அஸ்ஸாம் காவல் துறையின் சிறப்பு டிஜிபி ஹர்மீத் சிங் கூறியதாவது, “இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக ரோஹிங்கியர்கள் நுழைவதற்கு இது போன்ற தரகர்கள் உதவுகின்றனர். அந்த வகையில், அசாமில் 5 தரகர்களையும், திரிபுராவில் 25 தரகர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்” என தெரிவித்தார்.
மேலும் கடந்த நவம்பர் 1ஆம் தேதி அசாம் மாநிலத்தின் பக்சா மாவட்டத்தில் சட்ட விரோதமாக நுழைந்து வசித்து வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக ஊடுருவும் நபர்கள் என வெளிநாட்டினருக்கான தீர்ப்பாயத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.