உத்தரகாண்ட்: உத்தரகாசி மாவட்டம் புரோலாவில் கனமழை பெய்து வருகிறது. இங்குள்ள குமோலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இங்கு ஏற்பட்ட வெள்ளத்தில் 8 கடைகள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏடிஎம் மிஷினும் அடித்துச் செல்லப்பட்டது. இதில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
உத்தரகாசியின் புரோலா பகுதியில் நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 10)இரவு பலத்த மழை பெய்தது. இதனால் குமோலா ஆற்றில் நீர்வரத்து திடீரென அதிகரித்தது. இதனால் குமோலா சாலையில் அமைந்துள்ள இரண்டு நகைக்கடைகள் உட்பட 8 கடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதுமட்டுமின்றி இங்கு பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம் ஒன்றும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
இது குறித்து, பஞ்சாப் வங்கியின் கிளை மேலாளர் சஞ்சல் ஜோஷி கூறுகையில், இந்த ஏடிஎம்மில் புதன்கிழமை மாலைதான் 24 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில், அதிக பணம் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இருப்பினும், ஏடிஎம்மில் எவ்வளவு பணம் இருந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என கூறினார். இந்நிலையில் அங்கிருக்கும் பல குடியிருப்பு வீடுகள் மற்றும் கடைகள் இன்னும் சேதம் ஏற்படக்கூடிய அச்சுறுத்தலில் உள்ளன.
புரோலோ தாசில்தார் மற்றும் நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சேதம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், பாதுகாப்பு கருதி அருகில் உள்ள வீடுகளில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். நிலச்சரிவு காரணமாக மாவட்டத்தில் பல சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் வாகனங்கள் தேங்கி நிற்கின்றன. இதனால், மக்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து டேராடூன் மாவட்டம் விகாஸ்நகர் தாலுகாவில் உள்ள சர்பா கிராமத்தில் தொடர்ந்து கனமழை பெய்ததால், நேற்று (ஆகஸ்ட் 11) காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்கு நிலைமை மிகவும் மோசமானதால் SDRF(மாநில பேரிடர் மீட்புக் குழு) குழுவின் மூலம் மீட்பு பணி நடந்து வருகிறது. தகவல் அறிந்த SDRF குழுவினர் சம்பவ இடத்தில் சிக்கியவர்களை மீட்டனர். மேலும், அவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பபட்டுள்ளனர்.
இதையும் படிங்க:வீட்டின் கூரை மேல் ஏறிய 6 அடி நீள சாரைப் பாம்பு