தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் (Bharat BioTech) நிறுவனத்தின் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்று வரும் 'கோவாக்சின்' கரோனா தடுப்பு மருந்து தயாரிப்புப் பணிகள் குறித்து பிரதமர் மோடி நேரில் சென்று நேற்று (நவம்பர் 28) ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, குஜாராத் மாநிலத்தில் உள்ள ஜைடஸ் கேண்டிலா (Zydus Candila) நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்து தயாரிப்புப் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
இந்நிலையில், ஹைதராபாத்தில் கரோனா தடுப்பூசி ஆராய்ச்சியை பார்வையிட பிரதமர் மோடி வருகை தந்தது புதிய உத்வேகத்தை அளித்திடும் என தெலங்கு தேசம் கட்சியின் (டிடிபி) தேசியத் தலைவரும் ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தெலங்கு தேசம் கட்சியினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " இன்று நாயுடுவின் கனவு நனவாகியுள்ளது. ஜீனோம் பள்ளத்தாக்கில் உள்ள பாரத் பயோடெக் கோவிட் -19 தடுப்பூசியை உருவாக்கவும், சுகாதார நெருக்கடியின் போது நாட்டிற்கு பெரிதும் உதவியாக இருந்தது. பல சர்வதேச நிறுவனங்கள் ஜீனோம் பள்ளத்தாக்கில் ஆராய்ச்சிகளை தொடங்கியதன் மூலம் பெரும் வேலை வாய்ப்புகள் உருவாக்கியுள்ளது" எனத் தெரிவித்தார்.