நாடு முழுவதும் கரோனா 2ஆவது அலையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் நாள்தோறும் லட்சக் கணக்கனோர்களுக்கு புதிய பாதிப்புகளும், ஆயிரக்கணக்கான இறப்புகளும் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி, கரோனாவை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை மாநிலங்களுக்கும், சுகாதாரத்துறைக்கும் அறிவுறுத்தி வருகிறார்.
அந்த வகையில், இன்று பிரதமர், மத்திய அமைச்சர்கள் குழுவினருடன் காணொலி காட்சி வாயிலாக காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்தினார். அப்போது, கரோனாவால் நாடு சந்தித்து வரும் மோசமான சூழல் மற்றும் கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என கூறப்படுகின்றது.
இதற்கிடையில் நேற்று, ராணுவ தளபதி நரவனேவுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். அப்போது கரோனா கட்டுப்பாட்டு பணிகளில் ராணுவம் மேற்கொண்டு வரும் பணிகள் மற்றும் தயார் நிலைகள் குறித்து கேட்டறிந்தார். இது தொடர்பாக ராணுவம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை நரவனே பிரதமருக்கு விளக்கினார்.
அப்போது, நாடு முழுவதும் எங்கெல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ, அங்கெல்லாம் தற்காலிக மருத்துவமனைகளை ராணுவம் அமைத்து வருவதாகவும், மக்கள் தங்களுக்கு அருகாமையில் இருக்கும் ராணுவ மருத்துவமனைகளை நாடலாம் எனவும் பிரதமருக்கு நரவனே விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க: தெற்கு வெற்றி உறுதியான, கிழக்கு ஊசலாட்டம்