டெல்லி: நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான வேலைவாய்ப்பு முகாம்கள் நாடு முழுவதும் நடக்கவிருக்கின்றன. இந்த முகாம்களை (ரோஸ்கர் மேளா) பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். இந்த முகாமில் முதல்கட்டமாக 75,000 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
இதுகுறித்து மத்திய அரசு தரப்பில், அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் தற்போதுள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு பிரதமரின் வழிகாட்டுதல்படி அனைத்து அமைச்சகங்களும், துறைகளும் இயக்கம் போல் செயல்படுகின்றன. நாடு முழுவதும் இருந்து தெரிவு செய்யப்பட்டு புதிதாக பணி அமர்த்தப்படுவோர் மத்திய அரசின் 38 அமைச்சகங்கள்/துறைகளில் பணியில் சேர்வார்கள்.
பிரிவு-ஏ, பிரிவு-பி (அரசிதழ் பதிவு பெற்றவர்கள்), பிரிவு-பி (அரசிதழ் பதிவு பெறாதவர்கள்), பிரிவு-சி என பல்வேறு நிலைகளில், இவர்கள் அரசுப் பணியில் சேர்வார்கள். மத்திய ஆயுதப்படை காவலர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், கீழ்நிலை எழுத்தர்கள், சுருக்கெழுத்தர்கள், தனி உதவியாளர்கள், வருமான வரி ஆய்வாளர்கள் பலவகை பணி செய்வோர் (எம்டிஎஸ்) உள்ளிட்ட பதவிகளுக்கான நியமனங்களாக இவை இருக்கும்.
மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகள் தாங்களாகவோ அல்லது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், பணியாளர் தேர்வாணையம், ரயில்வே பணியாளர் நியமன வாரியம் போன்ற பணிநியமன முகமைகள் மூலம், இயக்கம் போல் இந்த பணி நியமனங்கள் நடைபெறுகின்றன. இதனை விரைவுப்படுத்த தெரிவு நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டிருப்பதோடு தொழில்நுட்ப ரீதியாகவும், நடத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒவ்வொரு கிராமமும் நாட்டின் முதல் கிராமமாகும் - பிரதமர் மோடி