டெல்லி: அமெரிக்காவில் நடந்துவரும் ஜனநாயகத்திற்கான உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி நரேந்திர மோடி இன்று (மார்ச் 29) காணொளி காட்சி மூலம் உரையாற்றினார். இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜாம்பியா அதிபர் ஹகைன்டே ஹிசிலிமா, நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூடே, தென் கொரிய அதிபர் யுன் சக், கோஸ்டா ரிகா அதிபர் ரோட்ரிககோ உள்ளிட்டோரும் காணொலி காட்சி மூலம் உரையாற்றினர்.
அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில், "இந்தியா பல சவால்களை எதிர்கொண்ட போதிலும், “சப்கா சாத், சப்கா விகாஸ்” (அனைவரும் இணைந்து அனைவருக்குமான முன்னேற்றம்) என்ற ஜனநாயக உணர்வின் காரணமாக வேகமாக வளரும் பொருளாதாரமாக மாறியுள்ளது. ஜனநாயகம் என்பது ஒரு கட்டமைப்பு மட்டுமல்ல, ஆத்மாவும் கூட. ஆகவே, ஒவ்வொரு மனிதனின் தேவைகளுக்கும் அபிலாஷைகளுக்கும் சமமாக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
இந்தியா என்பது ஜனநாயகத்தின் தாயாகும். நாட்டில் வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டுவந்து காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுகிறோம். அதேபோல தண்ணீரைப் பாதுகாப்பது, அனைவருக்கும் சமையல் எரிபொருள் வழங்குவது உள்ளிட்ட எதுவாக இருப்பினும், குடிமக்களின் கூட்டு முயற்சியால் சாத்தியப்படுத்துகிறோம்.
கரோனா தொற்று ஊரடங்கின் போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பில்லியன் கணக்கான மக்களுக்கு 2 பில்லியனுக்கும் அதிகமான டோஸ்களாக வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் மில்லியன் கணக்கான தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கும் வழங்கியது. இவை அனைத்தும் எங்களின் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்னும் ஜனநாயக உணர்வால் வழிநடத்தப்பட்டது.
சொல்லப்போனால், எங்களது பண்டைய மகாபாரதத்தில், குடிமக்களின் முதல் கடமை அவர்களின் தலைவனை தேர்ந்தெடுப்பதாகும். அதேபோல மற்ற வேதங்கள், பரந்த மனப்பான்மை உடன் அரசியல் அதிகாரங்களை பற்றி எடுத்துரைக்கின்றன. ஆனால், ஆட்சியாளர்கள் பரம்பரை வழியில் வரவில்லை. இதுவே, இந்தியாவை ஜனநாயகத்தின் தாய் என்றழைக்க முக்கிய சான்றாக உள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் ஏன் அறிவிக்கப்படவில்லை? - தேர்தல் ஆணையம் விளக்கம்