பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 'பரிக்ஷா பே சார்ச்சா' என்ற பெயரில் 2018ஆம் ஆண்டிலிருந்து மாணாக்கர், ஆசிரியர்கள், பெற்றோருடன் கலந்துரையாடிவருகிறார்.
அந்தவகையில், நான்காவது ஆண்டாக இந்தக் கலந்துரையாடல் நிகழவுள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் நடக்கும் இந்த நிகழ்வு கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தாண்டு இன்று (ஏப்ரல் 7) மாலை 7 மணிக்கு நடைபெற உள்ளது.
கடந்தாண்டு இதில் பங்கேற்க நாடு முழுவதும் விண்ணப்பித்த இரண்டரை லட்சம் மாணாக்கரில் இரண்டாயிரம் பேர் வெற்றிபெற்று பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினர். அதில் 66 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பரிக்ஷா பே சார்ச்சா 2021
இந்தாண்டு நடக்கும் பரிக்ஷா பே சார்ச்சா நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மாணாக்கர் கலந்துகொண்டு காணொலி வாயிலாக நரேந்திர மோடியுடன் கலந்துரையாட உள்ளதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார்.
மேலும், அவர் கூறுகையில், இந்த 'பரிக்ஷா பே சார்ச்சா 2021' நிகழ்வில் பங்கேற்க 10.5 லட்சம் மாணவர்கள், 2.6 லட்சம் ஆசிரியர்கள், 92 ஆயிரம் பெற்றோர்கள் என 14 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர் என்றும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் பங்கேற்கும் 60 விழுக்காட்டினர் ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணாக்கர் ஆவர். வெளிநாட்டு மாணவர்கள் 81 பேர் முதன் முறையாக இதில் கலந்துகொள்கின்றனர்.
எந்த மாதிரியான கலந்துரையாடல்
மாணக்கருடன் நரேந்திர மோடியின் கலந்துரையாடலில் முக்கியமாக தேர்வுகள், அவற்றால் ஏற்படும் அழுத்தங்கள், பதற்றம் ஆகியவை குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்து விவாதிக்கப்படும்.
இதில் மாணவர்களின் கருத்துகள், பெற்றோர்கள்-ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்டறியும் மோடி தனது கருத்துகளையும், பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் எடுத்துரைப்பார் என்று தெரிகிறது.