டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்டோபர் 24) 82ஆவது முறையாக மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். நாட்டு மக்களுக்கு கோடிக்கணக்கான நன்றிகள் தெரிவித்துகொண்டு தனது உரையை தொடங்கினார்.
"100 கோடி தடுப்பூசி என்ற எண்ணிக்கை நிச்சயமாக மிகப்பெரியது. சுகாதாரப் பணியாளர்களின் அயராத உழைப்பும், உறுதியும் புதிய முன்னுதாரணத்தை உருவாக்கியுள்ளது.
உத்தரகண்டின் பாகேஸ்வரில் 100 விழுக்காடு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது மிகவும் கடினமான ஒன்று. தொலைதூரத்தில் உள்ள மாநிலம் இதனை நிகழ்த்தி காட்டியியுள்ளது. உத்தரகண்ட் அரசாங்கத்திற்கும் எனது பாராட்டுகள்.
அக்டோபர் 31ஆம் தேதி பிறந்தவர் நாட்டின் இரும்பு மனிதர் என்று அறியப்படும் சர்தார் வல்லபாய் படேல். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அவரது பிறந்தநாளை நாடு முழுவதும் கொண்டாடவுள்ளது. நாட்டுமக்கள் சார்பில் இரும்பு மனிதனை தலைவணங்குகிறேன்" என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
தேசிய ஒருமைப்பாடு இருந்தால், நாடு முன்னேறும், வளர்ச்சியடையும் என்று கூறிய பிரதமர், இதற்கு நமது சுதந்திர இயக்கம் மிகப்பெரிய உதாரணம் என்று தெரிவித்தார்.
ஒற்றுமையின் செய்தியை கூறும் சில செயல்களில் நாம் இணைந்து கொள்ள வேண்டியது நம் அனைவரின் கடமையாகும் என்று கூறிய பிரதமர், ஜம்மு-காஷ்மீர் காவல்துறை அலுவலர்கள் உரியில் இருந்து பதான்கோட் வரை வாகன பேரணி நடத்தி நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளனர். இந்த வீரர்கள் அனைவரையும் தலை வணங்குகிறேன் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உணவுக் கழிவிலிருந்து மின்சாரம்: பிரதமர் மோடியின் பாராட்டு மழையில் சிவகங்கை ’காஞ்சிரங்கால்’ கிராம மக்கள்!