டெல்லி: புதிய வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை (பிப்.12) மீண்டும் குற்றஞ்சாட்டினார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ராஜஸ்தானின் ஹனுமன்கர் மாவட்டத்தின் பிலிபங்கா நகரில் விவசாயிகள் முன்னிலையில் "மகாபஞ்சாயத்து" நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில், “நாட்டின் 40 சதவீத மக்களை பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதன் மூலம் பிரதமர் தனது நண்பர்களுக்கான பாதையை வகுக்க விரும்புகிறார். இவர்கள், விவசாய வணிகத்துடன் தொடர்புடையவர்கள். சரக்கு சேவை வரிக்கு பின்னர் அமல்படுத்தப்பட்ட வேளாண் சட்டங்கள் நாட்டு மக்களுக்கு மற்றொரு அடியாகும்.
இந்தச் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால் விவசாயிகள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள் உள்பட நாற்பது சதவீத மக்கள் பாதிக்கப்படுவார்கள். பணமதிப்பிழப்பு நடவடிக்கை கறுப்பு பணத்துக்கு எதிரானது அல்ல. நாட்டு மக்களுக்கு எதிரானது என்று நான் அன்றே கூறினேன். அதை மக்கள் யாரும் புரிந்துகொள்ளவில்லை. அதன்பின்னர் சரக்கு சேவை வரி அமல்படுத்தப்பட்டு வணிகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
தற்போது நரேந்திர மோடியின் கவனம் விவசாயிகளின் மீது திரும்பியுள்ளது. கிழக்கு லடாக்கில் நான் சீனாவிடம் இந்திய நிலப்பரப்பை இழந்துள்ளோம். அவர் சீனாவை எதிர்த்து நிற்க மாட்டார். ஆனால் விவசாயிகளை அச்சுறுத்துவார். இதுதான் நரேந்திர மோடியின் நேர்மை” என்றார்.
இதையும் படிங்க: விவசாயிகளின் போராட்டம் அல்ல.. நாட்டு மக்களின் எழுச்சி இயக்கம்- ராகுல் காந்தி