நியூயார்க்: பிரதமர் மோடி அரசுமுறைப் பயணமாக நேற்று(ஜூன் 20) அமெரிக்கா சென்றார். பிரதமர் மோடி முதல் முறையாக அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் வந்து இறங்கிய பிரதமர் மோடியை, அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா காம்போஜ் ஆகியோர் வரவேற்றனர். நியூயார்க் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்களும் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதைத் தொடர்ந்து நியூயார்க் நகரில் தொழிலதிபர்கள், பல்துறை நிபுணர்கள், விஞ்ஞானிகளை பிரதமர் மோடி சந்தித்தார். அதன் ஒரு பகுதியாக, அமெரிக்க கட்டுரையாளரும் புள்ளியியல் நிபுணருமான பேராசிரியரான நாசிம் நிக்கோலஸ் தலேப்பை சந்தித்தார்.
பிரதமர் மோடி பேராசிரியர் நாசிம் உடன் கலந்துரையாடினார். அப்போது பேராசிரியர் நாசிம் தான் எழுதிய 'ஸ்கின் இன் தி கேம்' (Skin in the Game) என்ற புத்தகத்தை பிரதமர் மோடிக்குப் பரிசாக வழங்கினார். பேராசிரியர் நாசிம், பாரிஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். நிலையற்றத் தன்மை குறித்த 'தி இன்செர்டோ' (The Incerto) என்ற கட்டுரைத் தொகுப்பை எழுதியுள்ளார்.
இந்த தொகுப்பு ஏராளமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பேராசிரியர் நாசிம் புள்ளியியல் தொடர்பாகவும் புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் தற்போது, நியூயார்க் பல்கலைக்கழகத்தில் ரிஸ்க் இன்ஜினியரிங் (Risk Engineering) பாடப்பிரிவின் பேராசிரியராக இருக்கிறார்.
அதேபோல், பிரதமர் மோடி அமெரிக்க எழுத்தாளரும் கல்வியியலாளருமான பேராசிரியர் ராபர்ட் தர்மனையும்(Robert Thurman) சந்தித்தார். எழுத்தாளர் தர்மன் பௌத்தம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். மேற்கத்திய நாடுகளில் பௌத்த ஆய்வுகளை மேற்கொண்டுவரும் முக்கியமான எழுத்தாளர் தர்மன் ஆவார்.
இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி வாஷிங்டன் சென்று அமெரிக்க அதிபர் பைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அதேபோல், அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டத்தில் உரையாற்ற இருக்கிறார். வரும் 23ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியினரை பிரதமர் மோடி சந்திக்கவுள்ளார். அதன் பிறகு அமெரிக்காவில் பயணத்தை முடித்துக் கொண்டு, அரசுமுறைப் பயணமாக எகிப்து செல்கிறார்.
இதையும் படிங்க: Modi US visit: பிரதமர் மோடி - எலான் மஸ்க் சந்திப்பு! இந்தியாவில் டெஸ்லா கிளை?