திருவனந்தபுரம் : பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப் பயணமாக கேரளா செல்கிறார். வரும் 24 ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் இருந்து இந்திய விமானப்படையின் விமானம் மூலம் புறப்படும் பிரதமர் மோடி மாலை 5 மணிக்கு கேரளா மாநிலம் கொச்சிக்கு செல்கிறார். பாஜக மாநாடு, மற்றும் பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
சுற்றுப் பயணத்தின் இடையே கேரளாவுக்கான வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். தொடர்ந்து நான்கு ரயில்வே திட்டங்கள், தொடக்கம் மற்றும் நிறைவு பெற்ற பணிகளை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். இந்நிலையில் கேரளா வரும் பிரதமர் மோடிக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர்.
பிரதமர் மோடியின் கேரளா பயணத்தின் போது தற்கொலை படைத் தாக்குதல் நடத்த உள்ளதாக மர்ம நபர்கள் மிரட்டல் கேரள மாநிலம் பாஜக அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளனர். மாநில பாஜக அலுவலகத்திற்கு கடந்த சில நாடகளுக்கு முன் இந்த மிரட்டல் கடிதம் கிடைத்ததாக மாநில தலைவர் சுரேந்திரன் தெரிவித்தார்.
மலையாளத்தில் எழுதப்பட்டு இருந்த அந்த கடிதம் கடந்த வாரம் சுரேந்திரனுக்கு வந்ததாகவும் அது குறித்து அவர் டிஜிபி அனில் கன்ட்டிடம் புகார் அளித்து உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது. மிரட்டல் கடிதம் தொடர்பாக கேரள காவல் துறை மற்றும் உளவுத் துறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் கேரள பயணம் ரத்து செய்யப்பட மாட்டாது என பாஜக தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான கிருஷ்ணதாஸ் தெரிவித்து உள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமர் மோடியின் கேரள பயணம் பல்வேறு குழுக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், பிரதமர் மோடியின் கேரளா வருகையில் பாதுகாப்பு குறித்த உளவுத் துறையின் அறிக்கை கவலைக்குரிய வகையில் இருப்பதாக தெரிவித்தார். அதேநேரம் பிரதமரின் கேரள வருகை ரத்து செய்யப்படாது என்றும் இது குறித்து மாநில அரசு விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
பிரதமர் மோடியின் வருகை சில நபர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும், சில மதக் குழுக்கள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு இடையூறு ஏற்படுவது வழக்கம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், பிரதமரின் கேரள பயணம் மாநில அரசியலில் சில மாற்றங்களைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
பிரதமர் மோடி வருகையின் போது மேற்கொள்ளப்பட இருந்த 49 பக்க பாதுகாப்பு அறிக்கை கசியவிடப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு அறிக்கை கசிந்ததை அடுத்து புதிய பாதுகாப்பு அறிக்கையை உருவாக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.
இதையும் படிங்க : யார் இந்த அம்ரித் பால் சிங்? வாரீஸ் டி பஞ்சாப் என்றால் என்ன? முழுத் தகவல்கள் இங்கே!