டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, இன்று (ஜூலை 7) சத்தீஸ்கர் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ள பிரதமர் மோடி, நிறைவுற்ற திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார்.
2024ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை தக்கவைக்க பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டு உள்ளது. இதனையடுத்து, ஏற்கனவே தொடங்கப்பட்ட பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை விரைந்து முடித்து தொடங்கி வைக்க மத்திய அரசு திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக களம் இறங்கி உள்ளது. குறிப்பாக, அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் நடைபெறும் திட்டங்களை விரைந்து முடிக்குமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி ரூ.7,600 கோடி மதிப்பிலான 10 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைப்பதற்காக இன்று சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் வர உள்ளார். அதுமட்டுமின்றி, விழாவையொட்டி நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் அவர் பேசுகிறார்.
இந்த நிகழ்ச்சியில், ஜபல்பூர் - ஜக்தல்பூர் தேசிய நெடுஞ்சாலை உடன் ராய்ப்பூரை இணைக்கும் 33 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட 4 வழிச்சாலை மற்றும் NH-130-இன் பிலாஸ்பூர் மற்றும் அம்பிகாபூர் இடையே 4 வழிச்சாலை, பிலாஸ்பூர் - பத்ரதலி சாலை உள்ளிட்ட ஐந்து தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை பிரதமர் மோடி அர்ப்பணிக்க உள்ளார்.
NH-130-இல் 6 லைன் கிரீன்ஃபீல்ட் ராய்ப்பூர் - விசாகப்பட்டினம் வழித்தடத்தில், 6 வழிச்சாலை 43 கிலோ மீட்டர் தொலைவிலான ஜாங்கி - சர்கி பிரிவு, 6 வழிச்சாலை 57 கிலோ மீட்டர் தொலைவிலான சர்கி - பசன்வாஹி பிரிவு மற்றும் 6 வழிச்சாலை 25 கிலோ மீட்டர் தொலைவிலான பசன்வாஹி - மரங்புரி பிரிவு என மூன்று தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளது.
துறைமுகங்களில் இருந்து நிலக்கரி, எஃகு, உரங்கள் மற்றும் பிற பொருட்களை கொண்டு செல்வதற்கு வசதியாக, ரூ.750 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 103 கிலோ மீட்டர் தொலைவிலான ராய்ப்பூர் - காரியார் ரயில் பாதை இரட்டிப்புப் பாதையை பிரதமர் மோடி, நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.
பின்னர் உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் செல்லும் பிரதமர் மோடி, அங்கு கீதா பிரஸ் நிறுவனத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க உள்ளார். பின், தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு செல்லும் பிரதமர் மோடி, கோரக்பூர் - லக்னோ வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் ஜோத்பூர் - சபர்மதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவைகளை தொடங்கி வைக்க உள்ளார்.
கோரக்பூர் - லக்னோ வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: பாபா கோரக்நாத்தின் நகரம் என்று அழைக்கப்படும் கோரக்பூருக்கும், நவாப்களின் நகரம் என்றும் அழைக்கப்படும் லக்னோவிற்கும் இடையே ஒரு முக்கிய தொடர்பை ஏற்படுத்த உள்ளது. இந்த ரயில் 302 கிலோ மீட்டர் தூரத்தை நான்கு மணி நேரத்திற்குள் நிறைவு செய்யும். இந்த ரயில் நாளை மறுநாள் (ஜூலை 9) முதல் தனது வழக்கமான சேவையைத் தொடங்க உள்ளது.
ஜோத்பூர் - சபர்மதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: இந்த அதிவேக ரயில் ராஜஸ்தானின் ஜோத்பூர் மற்றும் குஜராத்தில் உள்ள அகமதாபாத் இடையே போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.