மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 96ஆவது பிறந்த நாள் நாளை கொண்டாடப்படவுள்ளது. அவரை போற்றும் வகையில் வெளியாகவுள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் என்ற புத்தகத்தை பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் வெளியிடவுள்ளார். வாஜ்பாயின் பிறந்த நாளான நாளை நல்லாட்சி நாள் கடைபிடிக்கப்படவுள்ள நிலையில், மக்களவைச் செயலகத்தின் பதிப்பில் வெளியாகவுள்ள அந்த புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிடவுள்ளார்.
கடந்தாண்டு, பிப்ரவரி 12ஆம் தேதி, நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் திறக்கப்பட்ட வாஜ்பாயின் புகைப்படத்திற்கு உறுப்பினர்கள் அனைவரும் மரியாதை செலுத்தவுள்ளனர். அப்புத்தகத்தில், வாஜ்பாய் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகள், அவரின் அரிய புகைப்படங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளது. மக்களவைக்கு பத்து முறையும் மாநிலங்களவைக்கு இரண்டு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்ட வாஜ்பாய், பிரதமராக இருந்த போது பல பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.