டெல்லி: கல்வித்துறையில் புதிய திட்டங்களைத் தொடங்கி வைக்கும் பிரதமர், நாட்டின் கல்வி சமூகத்தினருடன் உரையாற்றுகிறார்.
உயர் கல்வியில் மாணவர்கள் நுழைவதற்கும், வெளி வருவதற்கும் பல்வேறு வாய்ப்புகளை வழங்குவது, முதலாமாண்டு பொறியியல் திட்டங்கள் பிராந்திய மொழிகளில் வழங்கப்படுவது, உயர் கல்வியை சர்வதேசமயமாக்குவதற்கான வழிகாட்டுதல்கள் போன்றவற்றிற்கு வழிவகை செய்யும் 'அகாடமிக் கிரெடிட்' வங்கியை பிரதமர் தொடங்கி வைப்பார்.
வித்யா பிரவேஷ் என்ற முதலாம் வகுப்பு மாணவர்களுக்கான விளையாட்டின் அடிப்படையில் பள்ளிக்குத் தயாராகும் தொகுதி, இடைநிலை அளவில் இந்திய சைகை மொழியை ஒரு பிரிவாக அறிமுகப்படுத்துவது, கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய மன்றத்தால் வடிவமைக்கப்பட்ட நிஷ்தா 2.0 என்ற ஆசிரியர் பயிற்சிக்கான ஒருங்கிணைந்த திட்டம், சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு திறன் அடிப்படையிலான மதிப்பீட்டு திட்டமான சஃபல் (கற்றல் நிலைகளை பகுப்பாய்வு செய்வதற்கான கட்டமைப்பு மதிப்பீடு), செயற்கை நுண்ணறிவுக்கென பிரத்யேகமான இணையதளம் உள்ளிட்ட முன்முயற்சிகளும் தொடங்கிவைக்கப்படவுள்ளது.
மேலும், தேசிய மின்னணு கல்வி கட்டமைப்பு மற்றும் தேசிய கல்வி தொழில்நுட்ப மன்றம் ஆகியவையும், இந்த நிகழ்வின்போது அறிமுகப்படுத்தப்படுகிறது.
தேசிய கல்விக்கொள்கை 2020-இன் இலக்குகளை அடைவதை நோக்கிய குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை இந்த முன்முயற்சிகள் குறிப்பதோடு, கல்வித் துறையை மேலும் துடிப்பானதாகவும், அணுகும் வகையிலும் இந்த முயற்சிகள் மாற்றும்.
தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கு வலுவான அடித்தளத்தை கட்டமைக்கவும், கல்வியை முழுமையானதாக மாற்றவும், கற்றலின் நிலையை மாற்றவும் தேசிய கல்விக் கொள்கை 2020, வழிகாட்டும் தத்துவமாக விளங்குகிறது.
21-ஆம் நூற்றாண்டின் இந்த முதலாவது கல்விக் கொள்கை, 34 ஆண்டுகள் பழமையான தேசிய கல்விக் கொள்கை, கடந்த 1986-க்கு மாற்றாக அமையும்.
அணுகுதல், சமவாய்ப்பு, தரம், குறைந்த கட்டணம் மற்றும் பொறுப்புணர்வுடன் கூடிய அடித்தூண்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய கல்விக் கொள்கை, 2030-க்குள் நீடித்த வளர்ச்சியை எட்டுவதற்கான செயல்திட்டத்தை நிறைவேற்றுவதற்கேற்ப உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவை வலிமையான அறிவாற்றல்மிக்க சமுதாயம் மற்றும் உலகளவில் அறிவாற்றலில் சிறந்த சக்தியாக மாற்றும் நோக்குடன், பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரிக் கல்வியை மேலும் முழுமையான, நெகிழுந்தன்மையுடைய, பலதரப்பட்டதாக, 21ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கேற்ப மாற்றியமைப்பதுடன், ஒவ்வொரு மாணவரின் தனித்தன்மையை வெளிக்கொணரும் வகையிலும் இது உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பிரதமர் பங்கேற்கும் இந்நிகழ்வில் மத்திய கல்வி அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இதையும் படிக்கலாமே:NEETஇல் ஓ.பி.சி. இட ஒதுக்கீடு - பிரதமருடன் அமைச்சர் பூபேந்திர் யாதவ் சந்திப்பு