டெல்லி: தனது மக்களவைத் தொகுதியான வாரணாசிக்கு திங்கள்கிழமை செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு பிரயாகராஜ் - வரணாசி நகரத்திற்கு இடையிலான 6 வழி தேசிய நெடுஞ்சாலையைத் திறந்து வைக்கிறார். பின்னர், வாரணாசியில் நடைபெறும் தேவ் தீபாவளி நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வாரணாசி சென்று காசி விஸ்வநாதர் கோயில் தள திட்டத்தினை பார்வையிடும் பிரதமர், சாரநாத் தொல்பொருள் தளத்திற்கும் செல்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ. 2,447 கோடி செலவில், புதிதாக 73 கி.மீ நீளம் அகலப்படுத்தப்பட்ட ஆறு வழிச்சாலையான தேசிய நெடுஞ்சாலை 19, பிரயாகராஜ் மற்றும் வாரணாசி இடையேயான பயண நேரத்தை ஒரு மணி நேரத்திற்கு குறைக்கும்.
வாரணாசியின் தேவ் தீபாவளி உலகப் புகழ்பெற்ற ஒளி மற்றும் உற்சாகமான பண்டிகையாக மாறியுள்ளது. இந்த தீபவிழா இந்து மாதமான கார்த்திகை மாதத்தின் பவுர்ணமி நாளில் கொண்டாடப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர் வாரணாசியின் ராஜ் காட்டில் மண் விளக்கு ஏற்றி விழாக்களைத் தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து புனித கங்கை நதியின் இருபுறமும் 11 லட்சம் தீபங்கள் ஏற்ப்படுகின்றன.
தொடர்ந்து, இந்த மாத தொடக்கத்தில் அவரால் திறந்து வைக்கப்பட்ட சாரநாத்தின் தொல்பொருள் தளத்தின் ஒளி மற்றும் ஒலி நிகழ்ச்சியையும் அவர் பார்வையிடுகிறார்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: