டெல்லி: கேரள மாநிலத்தில் மின்சாரம் மற்றும் நகர்ப்புறத் துறையின் பலகோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை சுமார் 4.30 மணியளவில் காணொலி காட்சி மூலம் தொடங்கிவைக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மின் மற்றும் புதிய - புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான மத்திய மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் தமிழ்நாடு-கேரள மாநிலங்களுக்கிடையேயான மின் பரிமாற்றத் திட்டமான 320 கே.வி. புகலூர் - திருச்சூர் திட்டத்தை தொடங்கிவைக்கிறார். இது இந்தியாவில் செயல்படுத்தப்படும் மின்னழுத்த மூலமாற்றி அடிப்படையிலான உயர் மின்னழுத்த நேரடி மின்னோட்டத் திட்டம். 5,070 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இது சுமார் 2000 மெகாவாட் மின்சாரத்தைப் பரிமாற்றும் வசதியைக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கு வழக்கமாகத் தேவைப்படும் இடத்தைவிட 35-40 விழுக்காடு குறைவான நிலத்தடமே போதுமானதாக உள்ளது.
காசர்கோடு மாவட்டத்தின் பைவாலிகே, மீன்ஜா, சிப்பார் ஆகிய கிராமங்களில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட தேசிய சூரிய ஆற்றல் திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டுள்ள 50 மெகாவாட் காசர்கோடு சூரியசக்தி திட்டத்தையும் பிரதமர் இன்று திறந்துவைக்கிறார். இந்தத் திட்டம், மத்திய அரசின் நிதியுதவியுடன் சுமார் 280 கோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் மாநகராட்சியில் அவசரகால சூழ்நிலைகளில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 94 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தையும் திறந்துவைக்கிறார்.
திருவனந்தபுரத்தில் தற்போதுள்ள 37 கி.மீ. சாலைகளை உலகத்தரம் வாய்ந்த ஸ்மார்ட் சாலைகளாக மாற்றும் நோக்கில் 427 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சாலைகளையும் திறந்துவைக்கிறார்.
திருவனந்தபுரம் மக்களுக்கு குடிநீர் விநியோகத்தை அதிகரிக்கும் நோக்கில் அருவிக்கராவில் தற்போதுள்ள சுத்திகரிப்பு நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, அதனை பிரதமர் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்துவைக்கிறார்.