வங்கக்கடலில் உருவாகும் யாஷ் புயல் அதிதீவிரப் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் வரும் மே 26ஆம் தேதி கரையைக் கடக்கும் என்றும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே.23) ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மூத்த அரசு அலுவலர்கள், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அலுவலர்கள் (என்.டி.எம்.ஏ) மற்றும் தொலைத் தொடர்பு, மின்சாரம், உள்நாட்டு விமானப் போக்குவரத்து, புவி அறிவியல் ஆகிய அமைச்சகங்களின் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த புயல் காரணமாக, டெல்லியிலிருந்து ஒடிசா மாநிலம் புவனேஷ்வர், புரி ஆகிய பகுதிகளுக்கு வரும் 12க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், இப்புயலை எதிர்கொள்ள தயாராகவுள்ளதாக, இந்திய கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.
மேலும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆகியோர் புயலை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.