டெல்லி: ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் கடல்சார் பாதுகாப்பைப் பலப்படுத்துவது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடலை இந்தியா இன்று நடத்தவுள்ளது. ஆகஸ்ட் மாதத்திற்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார்.
இதில், கடல்சார் குற்றங்களைத் தடுத்தல், கடல்சார் பாதுகாப்பில் நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை அதிகரித்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. கடல்சார் பாதுகாப்புக்கென சிறப்புக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.
ஏற்கெனவே கடல்சார் பாதுகாப்புத் தொடர்பான பல்வேறு தீர்மானங்கள் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
எந்தவொரு நாடும் கடல்சார் பாதுகாப்பில் தன்னிச்சையாகச் செயல்பட முடியாது. அதன் அடிப்படையில் கடல் போக்குவரத்தில் காணப்படும் அச்சுறுத்தல்களையும் - அவற்றை எதிர்கொள்ளும் வழிமுறைகளையும் குறித்து விவாதிக்க இந்தக் கூட்டம் உதவிகரமாக இருக்கும்.
இந்தக் கூட்டத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள், அவ்வமைப்பின் முக்கிய அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.
இதையும் படிங்க: சிவனின் அருள் பெற சோமவார விரதம்