டெல்லி: ஆண்டுதோறும் நடைபெறும் ‘பரிக்ஷா பே சர்ச்சா’ (PPC) நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடுவது வழக்கம். இதில் வாழ்க்கை மற்றும் தேர்வுகள் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் பிரதமர் மோடி கலந்துரையாடுவார்.
அதன் படி இந்த ஆண்டின் பரிக்ஷா பே சர்ச்சா நிகழ்ச்சி டெல்லியில் உள்ள தல்கடோரா உள்விளையாட்டு அரங்கில், இன்று (ஜன.27) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி தூர்தர்ஷனில் நேரடியாக ஒளிபரப்பப்படும் எனவும், இந்த அதிக அளவிலான மாணவர்கள் பங்கேற்க உள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில்,”தல்கடோரா மைதானத்தில் பிரதமர் மோடியுடன் சுமார் 2,400 மாணவர் பங்கேற்க உள்ளனர். இது மட்டுமின்றி கோடிக்கணக்கான மாணவர்கள் அவரவர் பள்ளிகள் இருந்து நிகழ்ச்சியை நேரடியாக பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இந்த நிகழ்ச்சிக்காக 155 நாடுகளிலிருந்து சுமார் 38.80 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர் , இது கடந்த ஆண்டை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம்.
இந்த நிகழ்ச்சிக்காக 20 லட்சம் கேள்விகள் பெறப்பட்ட நிலையில் குடும்ப அழுத்தம், மன அழுத்த மேலாண்மை, நியாயமற்ற வழிகளைத் தடுப்பது, ஆரோக்கியமாக இருப்பது எப்படி, தொழில் தேர்வு போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் குறிப்பிட்ட கேள்விகளை தேர்வு செய்துள்ளது. கலா உத்சவ் போட்டியில் வெற்றி பெற்ற 80 மாணவர்கள் மற்றும் நாடு முழுவதிருந்தும் 102 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்வர்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆனந்த் அம்பானி - ராதிகா இணை திருப்பதி கோயிலில் சாமி தரிசனம்..