டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை கோவாக்ஸின் தடுப்பூசியை உட்செலுத்திக்கொண்டார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச்1) கோவாக்ஸின் தடுப்பூசியை எடுத்துக்கொண்டார். அவருக்கு செவிலியர் நிவேதா பாரத் பயோடெக்கின் கோவாக்ஸின் தடுப்பூசியை செலுத்தினார். இவர் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். அப்போது அருகில் இரண்டாவது செவிலியராக ரோசம்மா அனில் பணியாற்றினார். இவர் கேரளத்தை சேர்ந்தவர்.
பிரதமர் நரேந்திர மோடி தான் தடுப்பூசி போட்டுக்கொண்டது தொடர்பாக புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், எய்ம்ஸ் மருத்துவமனையில் என்னுடைய முதல் தடுப்பூசி டோஸை எடுத்துக்கொண்டேன். கோவிட் தடுப்பூசியை தகுதியானவர்கள் அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும்” என்றார்.
கரோனா வைரஸிற்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகள் முதல்கட்டமாக ஜனவரி 16ஆம் தேதி தொடங்கப்பட்டன. இந்நிலையில் இரண்டாம் கட்ட பணிகள் இன்றுமுதல் தொடங்கப்படுகின்றன. முதல் கட்ட தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டு 6 வாரங்கள் கழித்து பிரதமர் நரேந்திர மோடி தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார்.
கோவாக்ஸின் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு ஆரோக்கிய சேது அல்லது கோவின் ( COWIN 2.0) செயலியில் பதிய வேண்டும். முதல்கட்டமாக சுகாதார பணியாளர்கள், இராணுவ வீரர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டது.
தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக உலகம் முழுக்க 25 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் ஒரு லட்சத்து 57 பேர் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.