டெல்லி: இந்திய நாட்டின் சுதந்திர தின விழா நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி, மூவர்ணக் கொடியை ஏற்றி சுதந்திர தின உரை ஆற்றினார்.
பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக ஆற்றிய சுதந்திர தின உரையில், சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பு மற்றும் அவர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்தார். மோடி இதற்கு முன் ஆற்றிய உரைகளில் இந்திய மக்களை, ‘சக குடிமக்கள்’ என்றே அழைத்து வந்த நிலையில், இம்முறை அவர் நாட்டு மக்களை “எனது குடும்ப உறுப்பினர்கள்” என்று குறிப்பிட்டு உள்ளார்.
அடுத்த 5 ஆண்டுகளில் உலகப் பொருளாதாரத்தில் முதல் 3 இடங்களில் இந்தியா இருக்கும் என்று உறுதி அளிப்பதாகவும், நாட்டில் வறுமை குறையும்போது நடுத்தர வர்க்கத்தினரின் பலம் கணிசமாக அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், “மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டும் என்பதே நாட்டு மக்கள் அனைவரது விருப்பமும் ஆகும். அங்கு தற்போது அமைதி திரும்பி வருகிறது. மணிப்பூர் வன்முறை விவகாரத்திற்கு அமைதியின் மூலமாக மட்டுமே தீர்வு காண முடியும்.
ஒட்டுமொத்த நாடும் மணிப்பூர் மக்களுக்காக துணை நிற்கிறது. அமைதியின் மூலமாக மட்டுமே அங்கு தீர்வு காண முடியும். மத்திய மற்றும் மாநில அரசுகள் தீர்வு காண அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டு உள்ளார்.
30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் அதிகம் உள்ள நாடாக இந்தியா விளங்கி வருகிறது. சர்வதேச அளவில் இந்தியா மிகப்பெரிய நம்பிக்கையை விதைத்து உள்ளது. தற்போதைய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் தாக்கங்கள் அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு இருக்கும்.
இந்தியா நவீனத்துவத்தை நோக்கிய பாதையில் தொடர்ந்து முன்னோக்கி சென்று கொண்டு உள்ளது. இந்தியாவில் நடைமுறையில் உள்ள டிஜிட்டல் இந்தியா திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறிய உலக நாடுகள் முனைப்பு காட்டி வருகின்றன. நாட்டின் வளர்ச்சியை, வருங்கால தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள்தான் முன்னெடுத்துச் செல்கின்றனர். இந்தியா, தனது எதிர்காலத்தை தானே வடிவமைத்துக் கொள்ளும் திறனைப் பெற்று உள்ளது.
சர்வதேச அரங்கில் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களாக இந்தியர்கள் உருவெடுத்து உள்ளனர். இந்த அற்புதமான நேரத்தில், உழைக்கும் மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். டெல்லி செங்கோட்டையில் 10வது முறையாக தேசியக்கொடியை ஏற்றிய பிரதமர் மோடி, நாட்டு மக்களிடையே உரையாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Independence day 2023: சுதந்திர தினத்திற்காக ரயில் நிலையங்களில் தீவிர பாதுகாப்பு!