டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதற்காக தீவிரமாக முயற்சித்து வரும் எதிர்க்கட்சிகள், தேர்தலை சேர்ந்து எதிர்கொள்ளும் வகையில் கூட்டணியை அமைத்துள்ளன. திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 26 கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இக்கூட்டணிக்கு "இந்தியா" (INDIA) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தேர்தலைக் கருத்தில் கொண்டு இந்தப் பெயரை பரவலாக அனைத்து எதிர்க்கட்சியினரும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
இதனிடையே கடந்த 20ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டம் தொடங்கியது முதலே மணிப்பூர் இனக்கலவரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி இந்தியா கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மணிப்பூர் வன்முறை தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருவதால், நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் செயல்படாமல் உள்ளன. மேலும், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் இந்தியா கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
நாடாளுமன்றத்தில் இன்றும்(ஜூலை 25) ''இந்தியா'' கூட்டணி கட்சிகள் மணிப்பூர் விவகாரம் பற்றி பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் எனக் கூறி அமளியில் ஈடுபட்டதால், நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
இந்த நிலையில், பாஜகவின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா கூட்டணியை கடுமையாக விமர்சித்துள்ளார். 'இந்தியா' என்ற பெயரை வைத்து எதிர்க்கட்சிகள் பெருமை கொள்கின்றன, ஆனால் பயங்கரவாத அமைப்புகளின் பெயர்களிலும் கூட 'இந்தியா' உள்ளது என்று கூறினார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, கிழக்கிந்திய கம்பெனி, இந்தியன் முஜாகிதீன் போன்ற அமைப்புகளின் பெயர்களிலும் இந்தியா உள்ளது என்றும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி ஒரு திசை தெரியாத கூட்டணி என்றும் விமர்சித்தார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, மணிப்பூர் கலவரம் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான கொடூரக் காட்சிகள் இருந்தன. இதன் காரணமாகவே, எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எழுப்பி வருகின்றன.