வாஷிங்டன் : இந்தியாவில் இருந்து கொள்ளை அடிக்கப்பட்ட 100 பழங்கால சிற்பங்கள் மற்றும் பொருட்களை திருப்பித் தர அமெரிக்கா திட்டமிட்டு உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
அமெரிக்க சுற்றுப் பயணத்தின் இறுதி நாளில், ரொனல்ட் ரீகன் மையத்தில் இந்திய வம்சாவெளியினரை பிரதமர் மோடி சந்தித்தார். ரெனால்ட் ரீகன் மையத்தில் நடைபெற்ற விழாவில் இந்திய வம்சாவெளியினர் முன்னிலையில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 100 பழங்கால பொருட்கள் மற்றும் சிற்பங்களை திருப்பித் தர அமெரிக்க முடிவு செய்து உள்ளதாக மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
சர்வதேச சந்தையை இந்த பழங்கால பொருட்கள் அடைந்ததாகவும், திருப்பித் தரும் முடிவை எடுத்த அமெரிக்க அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார். இந்தியாவைச் சேர்ந்த இந்த பழங்கால பொருட்கள் சரியான அல்லது தவறான முறையில் சர்வதேச சந்தையை அடைந்ததாகவும், ஆனால் அவற்றை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் அமெரிக்காவின் முடிவு இரு நாடுகளுக்கு இடையிலான உணர்ப்பூர்வமான பிணைப்பை காட்டுவதாகவும் கூறினார்.
இந்திய கலாசாரம் மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ள மத்திய அரசு, நாட்டில் இருந்து திருடப்பட்டு உலக நாடுகளின் சர்வதேச சந்தைகளுக்கு கொண்டு செல்லப்பட்ட பழங்கால பொருட்களை மீண்டும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவித்தார்.
பல நூற்றாண்டுகளாக, கலாசார மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்த கணக்கில்லாத விலை மதிப்பற்ற கலைப் பொருட்கள் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டதாகவும், இந்திய கலைப் பொருட்கள் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை மீட்டு கொண்டு வருவதற்கு மத்திய அரசு அணுகுமுறையை கையில் எடுத்து உள்ளதாகவும் கூறினார்.
பிரதமரின் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உலக தலைவர்கள் மற்றும் பலதரப்பு நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில், இதுவரை 251 பழங்கால பொருட்கள் மீட்கப்பட்டு மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
இதில் கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பின்னர் மட்டும் 238 பழங்கால கலைப் பொருட்கள் மீட்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் கடந்த 2022ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் இருந்து சிறிய கடத்தல் கும்பல்கள் மூலம் கடத்தப்பட்ட 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான 307 பழங்கால கலைப் பொருட்கள் மீட்கப்பட்டு அமெரிக்க அதிகாரிகள் ஒப்படைத்ததாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
அதிபர் பைடனின் அழைப்பை ஏற்று 3 நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றார். முதல் நாளில் நியூயார்க்கில் நடைபெற்ற சர்வதேச யோகா தின விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். ஏறத்தாழ 180 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், கோடிக்கணக்கிலான மக்கள் கலந்து கொண்ட இந்த விழாவில் பிரதமர் மோடி தலைமை தாங்கி உரையாற்றினார்.
அங்கிருந்து வாஷிங்டன் சென்ற பிரதமர் மோடி, அமெரிக்க ராணுவம் அளித்த ராணுவ அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார். தொடந்து அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் அளித்த விருந்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பைடைன் மற்றும் பிரதமர் மோடி இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
சுகாதாரம், பருவநிலை மாற்றம் மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால் எழும் உலகளாவிய பிரச்சினைகள், இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் நிலவும் குளறுபடிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். மேலும் இந்தியா - அமெரிக்கா இடையிலான நட்புறவு, எரிசக்தி, தொழில்நுட்பம், பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.
இதையும் படிங்க : உலக நாடுகளிடம் ரஷ்யா உதவி? பெலாரஸ், உஸ்பெகிஸ்தான் அதிபர்களுடன் புதின் பேச்சுவார்த்தை!