டெல்லி: சீனாவில் பரவி வந்த ஒமைக்ரான் மாறுபாடு கரோனா பி.எஃப்.7 வைரஸ் இந்தியாவில் 3 பேருக்கு கண்டறியப்பட்ட நிலையில், பிரதமர் மோடி உயர்மட்ட அதிகாரிகளுடன் காணொலி மூலம் அவசர ஆலோசனைக் கூட்டம் மேற்கொண்டார்.
கூட்டத்தில் நாட்டின் கரோனா நிலவரம் மற்றும் அதுதொடர்பான விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து பண்டிகைகள் வரும் நிலையில், பொது இடங்களில் மக்கள் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா என உறுதிப்படுத்தக்கோரி பிரதமர் மோடி கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சர்வதேச விமான நிலையங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும், மருந்துப்பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை தயார் நிலையில் வைக்கக் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கரோனா தடுப்பூசி பிரசாரத்தின் தற்போதைய நிலை குறித்து பிரதமர் கேட்டறிந்ததாக கூறப்பட்டுள்ளது.
கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டவியா, அமித் ஷா, ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் மக்களவையில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பல்வேறு நாடுகளில் மீண்டும் பரவல் விகிதம் அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசுகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், பரவலுக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை அதிகரித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஷ்ரத்தா கொலை வழக்கு: அஃப்தாபின் ஜாமீன் மனு தள்ளுபடி