டெல்லி: 'மார்னிங் கன்சல்ட்' என்னும் நிறுவனம் நடத்திய பிரபல ஆட்சியாளர்கள் குறித்த பகுப்பாய்வில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு, ஆட்சிக்கு வந்ததிலிருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 'மார்னிங் கன்சல்ட் குளோபல் லீடர் அப்ரூவல் ரேட்டிங் டிராக்கரின்' பகுப்பாய்வு தரவரிசைப் பட்டியலில், இந்த ஆண்டும், உலகின் பிரபலத் தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்பட பல உலக தலைவர்களை முந்தி, மோடி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
பகுப்பாய்வு தரவுகளின்படி, குளோபல் லீடர் டிராக்கரில் நரேந்திர மோடி அதிகபட்சமாக 70 விழுக்காடு மதிப்பீட்டைப் பெற்றுள்ளார். கணக்கெடுப்பில், மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ரடோர் 66 விழுக்காட்டுடன் 2ஆவது இடத்திலும், இத்தாலியின் பிரதமர் மேரியோ டிராகி 58 விழுக்காட்டுடன் மூன்றாவது இடத்திலும், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் 54 விழுக்காட்டுடன் 4ஆவது இடத்திலும், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் 54 விழுக்காட்டுடன் 5ஆவது இடத்திலும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 44 விழுக்காட்டுடன் ஆறாவது இடத்திலும் உள்ளனர்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 43 விழுக்காடு மதிப்பீட்டில் ஏழாவது இடத்திலும், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஒன்பதாவது இடத்திலும் உள்ளனர். இந்தப் பட்டியலில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 40 விழுக்காட்டுடன் 10ஆவது இடத்தில் உள்ளார்.
இந்தத் தகவலை வர்த்தக, உணவு மற்றும் தொழில்துறை அமைச்சரான பியூஷ் கோயல் 'கூ' செயலியில் வெளியிட்டார். ஒவ்வொரு ஆண்டும் 13 பிரபலமான உலகத் தலைவர்களை 'மார்னிங் கன்சல்ட்' பகுப்பாய்வு செய்து மதிப்பீடு செய்கிறார்கள். இதில் ஆஸ்திரேலியா, இந்தியா, பிரேசில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், இத்தாலி, மெக்சிகோ, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளின் தலைவர்கள் அடங்குவர்.
பிரபல ஆட்சியாளர்களின் தரவரிசைப் பட்டியல்
- இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி - 70 விழுக்காடு
- மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ரடோர் - 66 விழுக்காடு
- இத்தாலி பிரதமர் மேரியோ டிராகி - 58 விழுக்காடு
- ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் - 54 விழுக்காடு
- ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் - 47 விழுக்காடு
- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - 44 விழுக்காடு
- கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ - 43 விழுக்காடு
- ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா - 42 விழுக்காடு
- தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் - 41 விழுக்காடு
- பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் - 40 விழுக்காடு
- ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் - 37 விழுக்காடு
- பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் - 36 விழுக்காடு
- பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ - 35 விழுக்காடு
ஒவ்வொரு நாட்டிலுள்ள மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்களின் அடிப்படையில் மதிப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தப் பகுப்பாய்விற்காக மார்னிங் கன்சல்ட் இந்தியாவில் 2,126 பேரை இணையதளம் வாயிலாக நேர்காணல் செய்தது. அமெரிக்க தரவு புலனாய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட், ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, தென் கொரியா, ஸ்பெயின், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள முன்னணி தலைவர்களுக்கான மதிப்பீடுகளைக் கண்காணித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பொருளாதாரத்தை ரிவர்ஸ் கியர் போட்டு செலுத்தும் பிரதமர் - ராகுல் காந்தி காட்டம்