போபால்: இந்தியாவிலிருந்து அழிந்துபோன இன சிவிங்கிப்புலிகளை பிரதமர் நரேந்திர மோடி மத்தியப்பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் இன்று விடுவித்தார். கண்டங்களுக்கு இடையேயான மாமிச உண்ணிகளை இடமாற்றம் செய்யும் உலகின் முதல் திட்டத்தின் கீழ், நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவிங்கிப்புலிகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பூங்காவில் விடுவிக்கப்பட்டுள்ள எட்டு சிவிங்கிப்புலிகளில் ஐந்து பெண், மூன்று ஆண் சிவிங்கிப்புலிகள்.
அதன்பின் சிவிங்கிப்புலிகள் ஆர்வலர்கள், சிவிங்கிப்புலிகள் மறுவாழ்வு மேலாண்மை குழு மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினார் அதன்பின் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பிரதமர், "குனோ தேசியப் பூங்காவில் சிவிங்கிப்புலிகளை விடுவித்திருப்பது, இந்தியாவின் வனவிலங்குகளுக்கும் அதன் வாழ்விடத்துக்கும் புத்துயிர் அளிப்பது மற்றும் பல்வகைப்படுத்துவதற்கான அவரது முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
1952ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து சிவிங்கிப்புலி இனம் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. விடுவிக்கப்பட்டசிவிங்கிப்புலிகள் நமீபியாவைச் சேர்ந்தவையாகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இவை கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தியாவில் சிறுத்தை அறிமுகமானது, கண்டங்களுக்கு இடையேயான உலகின் முதல் பெரிய மாமிச உண்ணிகள் இடமாற்றத் திட்டத்தின் கீழ், இது செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் திறந்த காடுகள் மற்றும் புல்வெளி சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுக்க சிவிங்கிப்புலிகள் அறிமுகம் பெரிதும் உதவும். இது பல்லுயிரியலைப் பாதுகாக்கவும், நீர் பாதுகாப்பு, கார்பன் சுரப்பு மற்றும் மண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாத்தல் போன்ற சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகளை மேம்படுத்தவும், சமூகத்திற்கு பெருமளவில் பயனளிக்கும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு பாதுகாப்புக்கான உறுதிப்பாட்டிற்கு இணங்க இந்த முயற்சி, சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலா நடவடிக்கைகள் மூலம் உள்ளூர் சமூகத்திற்கு மேம்பட்ட வாழ்வாதார வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும்.
இந்தியாவில் சிவிங்கிப்புலிகளின் வரலாற்று மறு அறிமுகம், கடந்த எட்டு ஆண்டுகளில் நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நீண்ட தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும், இதன் விளைவாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. 2014ஆம் ஆண்டு நாட்டின் புவியியல் பரப்பில் 4.90% ஆக இருந்த பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் பரப்பு தற்போது 5.03% ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் 2014-ஆம் ஆண்டு, பாதுகாக்கப்பட்ட பரப்பு 1,61,081.62 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட 740 இடங்களாக இருந்தது. தற்போது இது 1,71,921 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 981 இடங்களாக அதிகரித்துள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் காடு மற்றும் மரங்களின் பரப்பளவு 16,000 சதுர கி.மீ. காடுகளின் பரப்பளவு தொடர்ந்து அதிகரித்து வரும் உலகின் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். சமூக ரிசர்வ் காடுகளின் எண்ணிக்கையிலும் உயர்வு ஏற்பட்டுள்ளது. 2014ல் வெறும் 43 ஆக இருந்த இவை 2019ஆம் ஆண்டில் 100க்கும் அதிகமாக அதிகரித்துள்ளன.
தோராயமாக 75,000 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்ட 52 புலிகள் காப்பகங்கள் உள்ளன. உலக அளவில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் சுமார் 75% இந்தியாவில் உள்ளன. 2022 ஆம் ஆண்டை விட நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாகவே 2018 ஆம் ஆண்டிலேயே புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் இலக்கை இந்தியா அடைந்துள்ளது. இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 2014 இல் 2,226-லிருந்து 2018 இல் 2,967 ஆக அதிகரித்துள்ளது.
2014ஆம் ஆண்டு ரூ.185 கோடியாக இருந்த புலிகள் பாதுகாப்புக்கான பட்ஜெட் ஒதுக்கீடு 2022ஆம் ஆண்டில் ரூ.300 கோடியாக அதிகரித்துள்ளது. ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை 2015ஆம் ஆண்டு 523-லிருந்து 28.87 சதவிகிதம் (இதுவரை அதிக வளர்ச்சி விகிதங்களில் ஒன்று) அதிகரித்து தற்போது 674 ஆக உயர்ந்துள்ளது எனத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய பிரதேச ஆளுநர் மங்குபாய் படேல், முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பூபேந்தர் யாதவ், ஜோதிர் ஆதித்ய சிந்தியா, அஸ்வினி சவுபே ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைகள்