டவ்-தே புயல் பாதிப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி, இன்று (மே.19) குஜராத் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டார். தனி விமானம் மூலம் குஜராத் மாநிலத்தின் பாவ்நகர் வந்தடைந்த பிரதமர் மோடி, புயல் பாதித்த பகுதிகளை விமானம் மூலமாக பார்வையிட்டார்.
தொடர்ந்து, உனா, டையூ, ஜாஃபராபாத், மஹுவா, அகமதாபாத் ஆகிய பகுதிகளைப் பார்வையிட்ட மோடி, அகமதாபாத்தில் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானியுடன் ஆலோசனை மேற்கொண்டார். முதலமைச்சரிடம் இருந்து வெள்ள பாதிப்பு நிலவரங்களைக் கேட்டறிந்த பிரதமர், மாநிலத்திற்கு நிவாரண உதவி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
புயல் பாதிப்பிற்குள்ளான குஜராத்திற்கு மத்திய அரசு 1,000 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாகவும், பாதிப்பில் உயிரிழந்துள்ள நபர்களின் குடும்பத்தினருக்கு இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். மேலும், சேதமடைந்த உள்கட்டமைப்பு வசதிகளை சீர் செய்ய மத்திய அரசு உதவும் என்றும் உறுதியளித்துள்ளார்.
புயல் பாதிப்பு காரணமாக குஜராத்தில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சேதமடைந்ததாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: டவ்-தே புயலில் சிக்கி விபத்துக்குள்ளான கப்பல்: 14 பேர் பலி