லட்சத்தீவு: நாட்டின் ஒன்றுகூடி இருக்கும் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பண்பாடுகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டும் பிரதமர் மோடி சமீபத்தில் லட்சத்தீவிற்கு அவர் மேற்கொண்ட பயணங்களின் புகைப்படங்களை அவரது X தளத்தில் பதிவிட்டார். இந்தப் புகைப்படங்கள் சமூகவலைத்தள வாசிகளிடத்தில் அளப்பறியா ஆனந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2 மற்றும் 3ஆம் தேதிகளில் கொச்சி மற்றும் லட்சத்தீவு இடையே நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான ஆப்டிகல் ஃபைபர் இணைப்பு மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையம் மற்றும் ஐந்து மாதிரி அங்கன்வாடி மையம் ஆகிய திட்டங்களுக்காக அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் துவக்கி வைத்தார்.
இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக லட்சத்தீவு சென்ற பிரதமர் அம்மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் பழக்கவழக்கம், கலாச்சாரங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொண்டார். பிரிஸ்டைன் கடற்கரையில் காலை நடைப்பயிற்சியிலிருந்து, மாலையில் நாற்காலியில் அமர்ந்து இயற்கையின் எழிலை ரசிக்கும் ஓய்வு நேரம் வரையிலான காணொலிகளை அவரது X தளத்தில் பதிவிட்டுள்ளது சமூக வலைத்தளவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தொடர்ந்து அவர் பதிவிட்டதாவது, "நல்லதொரு பயண அனுபவத்தைப் பெறவிரும்புவார்களானால், அந்த பயணத்தின் பட்டியலில் லட்சத்தீவும் இடம்பெற வேண்டும். என்னுடைய லட்சத்தீவுப் பயணத்தில் நான் மிகுந்த உற்சாக மூட்டும் அனுபவங்களைப் பெற்றேன். இந்த பயணம் எனக்கு 140 கோடி மக்களின் நலனுக்காக இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை அளித்தது. மேலும் புதுப்புது அனுபவங்களை ரசித்தேன். அதில் நான் ஸ்நோர்கெலிங் செய்தது எனக்கு உற்சாகமளிக்கும் வகையில் ஒரு புது அனுபவமாக அமைந்தது.
இந்த அனுபவங்கள் என்னை வியக்கவைத்துள்ளன. இந்தப் பயணத்தின் போது நான் லட்சத்தீவு மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் பழக்கவழக்கம், பண்பாடு ஆகியவை குறித்து அம்மக்களுடன் கலந்துரையாடினேன். அகாடி, பங்காராம் மற்றும் கவரட்டி ஆகிய பகுதி மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடியதை நான் நல்வாய்ப்பாகக் கருதுகிறேன்.
அவர்களின் விருந்தோம்பல், பண்பாடு, கலாச்சாரம் ஆகியவை என்னை அதிகளவில் கவர்ந்துவிட்டது. லட்சத்தீவின் அழகில் நான் இன்னும் திகைத்துள்ளேன். இத்தகைய எழில் கொஞ்சும் லட்சத்தீவின் வளர்ச்சி குறித்து அரசு முன்னேற்றத் திட்டங்களைக் கொண்டு வரவேண்டும். அந்தவகையில், உள்நாட்டுக் கலாச்சாரம் மற்றும் மொழிகளில் தனித்து விளங்கும் லட்சத்தீவு திறம்படக் கட்டமைப்புகளை வளர்ப்பதற்குச் சுகாதாரம், விரைவான இணையச் சேவை, குடிநீர் ஆகியவற்றின் வளர்ச்சி மேன்மைக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
மேலும் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து அம்மக்களுடன் கலந்துரையாடியதில் எனக்குப் புத்துயிர் கிடைத்துள்ளது. ஆரோக்கியம், பெண்களின் வளர்ச்சி, விவசாயம் ஆகிய துறைகளில் கொண்டுவரப்பட்டுள்ள வளர்ச்சிகளை நேரடியாகப் பார்க்கும்போதும், மக்கள் கூறி கேட்கும் போதும் கூடுதல் உத்வேகத்தை அளிக்கிறது. பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றில் தனித்து விளங்கும் லட்சத்தீவு சென்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்" என தெரிவித்து லட்சத்தீவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காணொலிகளைப் பகிர்ந்துகொண்டார்.
இதையும் படிங்க: கரோனா தொற்று பாதிப்பால் மாரடைப்புகள் ஏற்படுகிறதா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்!