டெல்லி: ரவீந்திரநாத் தாகூர் பிறந்தநாளையொட்டி இன்று (மே 9) அவரது சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தாகூரின் சிந்தனைகள், செயல்களால் லட்சக்கணக்கான மக்கள் ஈர்க்கப்பட்டுள்ளனர் என்று பிரதமர் மோடி புகழாரம் தெரிவித்தார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில், "குருதேவ் தாகூரின் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. தாகூரின் சிந்தனைகள், செயல்களால் லட்சக்கணக்கான மக்கள் ஈர்க்கப்பட்டுள்ளனர். நமது தேசம், கலாச்சாரம், பண்பாட்டை எண்ணி பெருமைப்படக் கற்றுக் கொடுத்தவர். கல்வி கற்றல், சமூக அதிகாரமளித்தல் ஆகியவற்றை வலியுறுத்தியவர். இந்தியா குறித்த அவரது தொலைநோக்குப் பார்வையை நாம் நிறைவேற்ற வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சுதந்திரப் போராட்ட வீரர் கோபால கிருஷ்ண கோகலே, மேவார் மன்னர் மகாராணா பிரதாப் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களது படங்களுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்டத்தில் கோகலே ஆற்றிய பங்கு அளப்பறியது என்றும் அவரது பங்களிப்பை மறக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
மகாராணா பிரதாப், முகலாயர்களுக்கு எதிரான தனது துணிச்சலான எதிர்ப்பிற்காகப் போற்றப்பட்டவர். அவரின் வீரம், போராட்டம் எப்போதும் மக்களுக்கு ஊக்குவிக்கும் என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'மத்திய அரசிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பது வீண்' - தெலங்கானா அமைச்சர் கே.டி.ராமராவ்