சண்டிகர்: ஹரியானாவின் சூரஜ்கண்டில் நடைபெற்ற மாநில உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது பிரதமர், நாட்டின் வலிமை அதிகரிக்கும் போது, நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகன் மற்றும் ஒவ்வொரு குடும்பத்தின் சக்தியும் ஏற்றம் பெறும். கரோனா காலத்திலும், காவல்துறைக்கு கிடைத்த நற்பெயர் ஊக்கம் அளிப்பதாக இருந்தது. எளிதில் அணுகக் கூடியதாகவும், அர்ப்பணிப்பு உள்ளதாகவும் காவல் துறை திகழ்கிறது. இதனை மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் சர்வதேச அளவிலான குற்றங்கள் அதிகரித்து வருகிறது.
இந்த நேரத்தில் மத்திய மற்றும் மாநில முகமைகளுக்கிடையிலும் பரஸ்பர ஒத்துழைப்பும் முக்கியமானதாகும். இணையவெளி குற்றங்கள் அல்லது ஆயுதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு ட்ரோன் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினாலும், அச்சுறுத்தலைச் சமாளிக்க புதிய தொழில்நுட்பங்களை நோக்கி அரசு தொடர்ந்து பணியாற்ற வேண்டும். சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு திருத்த சட்டம் போன்ற சட்டங்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான உறுதியான போரில் நடைமுறை செயல்பாட்டுக்கு பலத்தை அளித்துள்ளன. நாடு முழுவதும் காவல்துறையினருக்கு ஒரே சீருடை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும். இதன் மூலம் காவல்துறை பணியாளர்களை எளிதில் அடையாளம் காண முடியும்.
அதே நேரம் மாநிலங்கள் தங்கள் எண் அல்லது சின்னங்களைக் கொண்டிருக்கலாம். இதை உங்கள் கவனத்திற்கு ஒரு சிந்தனையாக முன்வைக்கிறேன். ஒரு போலிச் செய்தி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தைப் பூதாகரமாக்கும் வல்லமைகொண்டது. எந்தவொரு தகவலையும் மக்களுக்கு அனுப்புவதற்கு முன்பு அதை பகுப்பாய்வு செய்து சரிபார்ப்பது அவசியம். போலி செய்திகள் பரவுவதைத் தடுக்க தொழில்நுட்ப முன்னேற்றத்தை பின்பற்ற வேண்டும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பாதுகாப்பு குறித்த பயிற்சிகளை நடத்துமாறு தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினரை கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'வாக்காளர்களை கவர ஹைதராபாத் பிரியாணி' - ஏஐஎம்ஐஎம் கட்சியின் புதிய முயற்சி!